Skip to main content

13 நாட்களாகத் தரை தட்டி நிற்கும் மிதவைக் கப்பல்; இறுதி முயற்சியில் வல்லுநர்கள்

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

Floating ship grounded for 13 days; Experts in the final effort

 

பலநாள் போராட்டத்திற்குப் பிறகும் பாறை இடுக்கில் சிக்கிய மிதவைக் கப்பலை அகற்ற முடியாததால் தூண்டில் பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளுக்கான ஸ்டீம் ஜெனரேட்டர் உற்பத்திக் கலன் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 'மாருதி' என்ற மிதவைக் கப்பல் மூலமாக கூடங்குளம் அணுமின் நிலையப் பகுதிக்குக் கொண்டுவரப்பட்டது. அப்போது கலன்களை எடுத்து வந்த மிதவைக் கப்பல் பாறை இடுக்கில் சிக்கிக் கொண்டது. இதனை மீட்கும் பணி கடந்த 9 ஆம் தேதி காலையில் இருந்து இன்று வரை அதற்கான பணிகள் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

 

முதற்கட்டமாக சென்னை துறைமுகப் பகுதியில் இருந்து சிறப்பு வல்லுநர்கள் குழு கடந்த 10ம் தேதி காலை அந்த பகுதிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். மிதவைப் படகு மூன்று இடங்களில் சேதமடைந்தது தெரிந்து அதைச் சரி செய்யும் பணியில் மும்பையைச் சேர்ந்த குழுவினர் ஈடுபட்டனர். தொடர்ந்து இழுவைப் படகின் மூலம் மிதவைக் கப்பல் இழுக்கப்பட்டது. ஆனால் கயிறு அறுந்துவிட்டது. அடுத்த முயற்சியாக அதிக விசைத் திறன் கொண்ட இழுவைப் படகை மும்பை துறைமுகத்திலிருந்து வரவழைத்துதான் மிதவைக் கப்பலை எடுக்க முடியும் என வல்லுநர் குழு பரிந்துரைத்தது.

 

ஆனால் அனைத்து முயற்சிகளும் பலனளிக்காமல் போனது. இந்நிலையில், நிலை சாய்ந்து வரும் கப்பல் தொடர்ந்து சாயாமல் இருக்க நான்கு புறமும் நங்கூரம் இடப்பட்டுள்ளது. தொடர்ந்து பணியாளர்கள் இரவு பகலாக சுமார் 300 மீட்டர் நீளம் வரை கடலில் கல் மற்றும் மண்ணைக் கொட்டி தூண்டில் வளைவு போன்ற அமைப்பை உருவாக்கி வருகின்றனர். அந்தத் தூண்டில் பாலம் வழியாக ராட்சத க்ரேனை கொண்டு சென்று ஸ்டீம் ஜெனரேட்டர் உற்பத்திக் கலன்களை மிதவைக் கப்பலில் இருந்து மீட்கத் திட்டமிட்டுள்ளனர். இதுவும் ஒரு வகை இறுதி முயற்சிதான் எனக் கூறப்படுகிறது. இந்த ஸ்டீம் ஜெனரேட்டர் உற்பத்திக் கலன்கள் முன்னதாகவே 400 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்