வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதன் எதிரொலியாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஒரு சில வாரங்களாகத் தொடர்ந்து மழை பெய்து வந்துள்ளது. இதனால் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதே சமயம் கடந்த மூன்று நாட்களாக மழை இல்லாத நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணைப்பகுதியில் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சின்னூர் மலை கிராம மக்கள் ஒருவரை ஒருவர் கைககளை பிடித்துக் கொண்டு கல்லாற்றை கடந்து வந்துள்ளனர்.
இந்த சூழலில் நேற்று சின்னூர் கோவில் திருவிழாவிற்காக ராமன் என்பவர் தனது மகள் அம்பிகா, பேரன்கள் குமரன், ரித்திக், தினேஷ் ஆகியோருடன் ஆற்றைக் கடக்கும் போது திடீரென்று நீர் வரத்து அதிகரித்ததால் ஆற்றின் ஆற்றின் நடுவே இவர்கள் 5 பேரும் சிக்கிக் கொண்டனர். இந்நிலையில் கல்லாற்றின் நடுவே சிக்கிய 3 சிறுவர்கள் உள்பட 5 பேரையும் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிறு மூலம் மலைக்கிராம மக்களும், இளைஞர்களும் சாதுரியமாகச் செயல்பட்டு மீட்டுள்ளனர்.