சேலம், எலமேஸ்வரர் கோவில் நிலத்தில் அனுமதியில்லாமல் கட்டடங்கள் கட்டுவதைத் தடுத்து, ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியர் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம், தாரமங்கலம் கிராமத்தில் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எலமேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலுக்கு சொந்தமாக தாரமங்கலம் கிராமத்தில் உள்ள நிலங்களை ஆக்கிரமித்த தனி நபர்கள், எந்த அனுமதியும் பெறாமல் கட்டடங்கள் கட்டுவதாக கூறி சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அனுமதியில்லாமல் கட்டடங்கள் கட்டுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, 2015இல் மனு அனுப்பியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்ச்செல்வி அடங்கிய அமர்வு, மனுதாரரின் மனு மீது ஐந்து ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து, மாவட்ட ஆட்சியர் காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தது.