வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று வலுவடை இருக்கிறது. இதன் எதிரொலியாக சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேபோல் அக்டோபர் 16ஆம் தேதி டெல்டா மாவட்டங்களிலும், 17ஆம் தேதி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூரில் அதிக கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழையானது பொழிந்து வருகிறது.
சென்னையில் மட்டும் ஒட்டுமொத்தமாக 21 சுரங்கப்பாதைகள் இருக்கிறது. மழை பெய்யும் சூழல் ஏற்பட்டால் நீரை வெளியேற்ற 21 சுரங்கப்பாதை பகுதிகளிலும் மாநகராட்சி சார்பில் மோட்டார்கள் வைக்கப்பட்டிருந்தது. தொடர் மழையால் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் கனமழை சென்னையில் ஐந்து சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது. தி நகர் மேட்லி, துரைசாமி, கணேசபுரம், சுந்தரம் பாயிண்ட், பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை என ஐந்து சுரங்கப் பாதைகளும் தற்காலிகமாக மழைநீர் தேங்கி நிற்பதால் மூடப்பட்டுள்ளது.