சென்னை சைதாப்பேட்டையில் இன்று (02/01/2022) 17- வது கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாமை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கரோனாவின் மூன்றாவது அலை தொடங்கியுள்ளது. கரோனா மூன்றாவது அலை சுனாமியைப் போல் தாக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகளவில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகளவில் கரோனா அதிவேகத்தில் பரவிக் கொண்டிருக்கிறது; மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்; தவிர்க்கக் கூடாது.
தடுப்பூசிப் போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாக தடுப்பூசிப் போட்டுக்கொள்ள வேண்டும். முன்கள பணியாளர்களுக்கு ஜனவரி 10- ஆம் தேதி அன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இயக்கம் தொடங்கும். சிறார்களுக்கான தடுப்பூசி இயக்கத்தை நாளை (03/01/2022) காலை 09.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பள்ளி, கல்லூரி வளாகங்களில் சிறார்களுக்கு தடுப்பூசி மையங்கள் அமைகின்றன. உயர்கல்வி பயிலும் மாணவர்களில் விடுபட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களை ஐந்து நாட்களில் சிகிச்சை முடித்து வீட்டுக்கு அனுப்பும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.
வீட்டில் தனிமைப்படுத்தப்படுபவர்களைக் கண்காணிக்க பிரத்யேகக் குழு ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும். சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் ஐந்து லட்சம் பேருக்கு மேல் உள்ளனர். சென்னையில் அதிகமாக மீனவ மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். தமிழ்நாட்டில் விரைவில் 'Virtual' மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். ஈஞ்சம்பாக்கம், மஞ்சம்பாக்கத்தில் 1,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. 'ஒமிக்ரான்' பரவிய பலருக்கும் குறைந்த பாதிப்போடு இருப்பதால் சிகிச்சை முறை மாற்றியமைக்கப்படும்" எனத் தெரிவித்தார்.