Skip to main content

போலீஸ் போல் நடித்து கொள்ளையில் ஈடுபட்ட ஐவர் கைது!

Published on 29/12/2021 | Edited on 29/12/2021

 

Five arrested for robbery

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள காரனூர் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அலமேலு அவரது மகன் ஆகியோர் தனியாக வீட்டில் வசித்து வந்தனர். இவரது மகன் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது கடந்த 20ஆம் தேதி இரவு ஒன்பது முப்பது மணி அளவில் அலமேலு மட்டும் வீட்டில் தனியாக டிவி பார்த்து கொண்டு இருந்தார். அப்போது அவரது வீட்டுக்குள் வந்த மூன்று நபர்கள் தாங்கள் போலீஸ்காரர்கள் என்று கூறியுள்ளனர். அதோடு அந்த வீட்டில் 12 வயது சிறுமியை மறைத்து வைத்திருப்பதாகக் கூறி கதவை திறக்கச் சொல்லி உள்ளே வந்துள்ளனர்.

 

அவர்களில் இரண்டு பேர் அலமேலுவை பிடித்துக்கொள்ள ஒருவர் வீட்டின் உள்ளே நுழைந்து வீட்டில் இருந்த ஒன்றரை பவுன் செயின், அலமேலு கழுத்தில் அணிந்திருந்த ஏழு பவுன் தாலிச் செயின் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அலமேலுவை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அப்படி ஓடும்போது வீட்டின் வெளிப்புறத்தில் பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மதிப்பு 3 லட்சம் இருக்கும். இந்த கொள்ளை சம்பந்தமாக அலமேலு கச்சிராயபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

 

இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு தனிப்படை இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் ஆரோக்கியதாஸ் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். கச்சிராபளையம் அருகே நேற்று சந்தேகப்படும் வகையில் சுற்றிக்கொண்டிருந்த 5 பேரை மடக்கி போலீசார் விசாரணை செய்தனர். அவர்கள் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த மச்சராஜா, தினகரன், தங்கப்பாண்டி, உசிலம்பட்டி கணேஷ்குமார், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த உமா ராணி என்ற பெண் உட்பட ஐவர் என்பது தெரியவந்தது. பிடிபட்ட 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

 

விசாரணையில் காரனூர் அலமேலு வீட்டில் புகுந்து நகைகளை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்ததோடு கொள்ளை சம்பவத்தில் பயன்படுத்திய காரையும் நகைகளையும் பறிமுதல் செய்தனர். கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் உட்பட  5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்