Skip to main content

2வது நாளாக தீவிரமடையும் மீனவர்கள் போராட்டம்!

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
Fishermen's struggle intensified for the 2nd day

தமிழக கடலோரப்பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்யும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றன. கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து காலவரையறையற்ற போராட்டம் நடத்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் சங்கங்கள் சார்பில் நேற்று முன்தினம் (17.02.2024) நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்திருந்தனர். அதன்படி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்குவதைக் கண்டித்தும், மீனவர்களின் படகுகள் நாட்டுடைமையாக்கப்படுவதைக் கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் 700க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று (18.02.2024) முதல் காலவரையறையற்ற போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். மீனவர்கள் தங்களது படகுகளில் கருப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

அதே சமயம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழக மீனவர்களை விடுவிக்க பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், ‘தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது நடவடிக்கைக்கு உள்ளாவது மிகுந்த கவலையளிக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில், இத்தகைய கைது நடவடிக்கைகள் மிகவும் அதிகரித்திருக்கின்றன; இக்காலத்தில் 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைவிட அதிர்ச்சியளிப்பது என்னவென்றால், மூன்று மீனவர்களை ‘மீண்டும் மீண்டும் குற்றம் புரிபவர்’ (habitual offender) பட்டியலில் அநியாயமாகச் சேர்த்து விடுவிக்காமல் தொடர்ந்து சிறையில் அடைத்திருப்பதுதான். இது நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பது மட்டுமல்லாமல், அவர்களது படகுகளை நாட்டுடைமையாக்கும் இலங்கை அரசின் செயல் சிறுகச் சிறுகச் சேர்த்த சேமிப்புகளையும் அழிக்கிறது.

பிரதமர் மோடியும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் உடனடியாக இதில் தலையிட்டு நமது மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதையும் அவர்களது படகுகள் விடுவிக்கப்படுவதையும் உறுதிசெய்திட வேண்டும் எனத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் சார்பாகவும் நான் கேட்டுக்கொள்கிறேன். இதனை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதி, நமது மீனவர்களின் நலனைக் காக்கும் வகையில் உறுதியான நடவடிக்கையை எடுத்திட வேண்டும். ஏனென்றால், அவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல, பெருமைமிகு இந்தியர்களும் கூட” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 2 ஆம் நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் இன்றும் (19.02.2024) ஈடுபட்டு வருகின்றனர். தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதற்கும், அவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து 700க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்களின் படகுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதே போன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் இன்று முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ராமேஸ்வரத்தில் இருந்து நாளை (20.02.2024) மீனவர்கள் நடைப்பயணமாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிடப் போவதாகவும், தங்களது குடும்ப அட்டையை ஆட்சியரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதே சமயம் பிப்ரவரி 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணிக்கவும் மீனவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்