
மீன்பிடி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றிய அணைக்கரை கொள்ளிடம் பகுதியில் தற்போது மீன்வளம் குறைந்து வருவதாக மீன்பிடி தொழிலாளர்கள் கவலையோடு தெரிவிக்கின்றனர்.
அணைக்கரை கொள்ளிடத்தில் வடக்கு பிரிவு, தெற்கு பிரிவுகள் மூலம் நாகை மற்றும் கடலூர் வீராணம் ஏரி உள்பட பாசன வசதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு மேல் பகுதியில் தண்ணீர் தேக்கி வைக்கப்படும். தண்ணீர் தேக்கப்பட்ட பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் மீன் பிடித்து வாழ்வாதாரத்தை பெருக்கி வந்தனர்.
ஆனால் தற்போது அணைக்கரை கொள்ளிட வடவாறு தலைப்பில் மீன்பிடி தொழிலாளர்கள் ஆற்றில் தங்களது வலைகளை வீசி மீன்பிடித்து வருகின்றனர். இந்த மீன்பிடி வலையில் கெண்டை ,ஆரா, கெளுத்தி, ஜிலேபி, உழுவை, என சிறிய (பொடி) மீன்கள் மட்டும் வலையில் மாட்டி வருகிறது.
இதை மீன்பிடி தொழிலாள்கள் அணைக்கரைக்கு வருகை தரும் பொதுமக்களுக்கும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பொடி மீன்களை கிலோ ரூ 50 முதல் 75 வரை விற்பனை செய்து வருகின்றனர்.
இது குறித்து மீன்பிடி தொழிலாளர்கள் கூறியதாவது, "அணைக்கரை கொள்ளிடப் பகுதியில் ஆறு மாதங்கள் வரை மீன்பிடி காலங்கள் உள்ளது.தற்போது மேட்டூர் அணையில் தண்ணீர் வரத்தால் மீன்பிடி வலையில் சிறிய நாட்டு மீன்களை பிடிக்க முடிகிறது
மேலும் பெரிய மீன்களான வாழை, கெண்டை வகையான ரோக்கு, பில்லு கெண்டை, கட்லா, விரால், கெளுத்தி, போன்ற பெரிய மீன்கள் மீன்பிடி வலையில் தென்படுவது இல்லை. மேட்டூர் அணை, கல்லணை, வீராணம் போன்ற இடங்களில் மீன்வளத் துறையின் மூலம் மீன்குஞ்சுகளை டன் கணக்கில் இனப்பெருக்கத்திற்காக விடுவதால் ஒரு மாத கால அளவில் மீன்கள் வளர்ந்து மீன்பிடி தொழிலாளர்கள் நல்ல வருமானம் பெருகியது.
தற்போது மீன்குஞ்சுகளை கொள்ளிட ஆற்றுபடுகையில் இனப்பெருக்கத்திற்காக டன் கணக்கில் ஆற்றில் விட மீன்வளத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.மீன்கள் வலையில் சிக்காததால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருமானமும் குறைகிறது.
தற்போது தீபாவளி சமயத்தில் சூழலில் 6 மணி நேரம் வலை வீசினால் 2 கிலோ அளவு உள்ள பொடி மீன்கள் மட்டும் பிடிக்க முடிகிறது இதனால் ஒரு நாள் வருமானம் ரூ 200 தாண்டவில்லை என வருத்தத்துடன் கூறினார்.
கொள்ளிடத்தில் மீன்பிடி தொழிலாளர்கள் மீன் பிடித்த போது முதலைகள் அட்டகாசங்களால் மீனவ தொழிலாளி உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கனக்கான மீன்பிடி தொழிலாளர்கள் கொள்ளிட ஆற்று வாழ்வாதாரத்தை நம்பி செயல்படும் தொழிலாளர்கள் வருமானத்தை பெருக்க மீன்வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கனும்," என்கிறார்கள் பலரும்.