Skip to main content

நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்; ஆதரவுக்கரம் நீட்டிய காவல் படை!

Published on 19/02/2021 | Edited on 19/02/2021

 

 

நடுக்கடலில் தவித்த மீனவர்கள் ஐந்து பேரை இந்தியக் கடலோரக் காவல் படையினர் மீட்டனர். அதைத் தொடர்ந்து, மீனவர்களை இன்று (19/02/2021) காலை கப்பல் மூலம் காரைக்கால் துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.

 

கடந்த பிப்ரவரி 16- ஆம் தேதி காரைக்காலுக்கு கிழக்கே 205 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் படகு ஒன்று பழுதாகி நிற்பதாக இந்தியக் கடலோரக் காவல்படை மையத்திற்கு சிக்னல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, கண்காணிப்பு விமானத்தை அனுப்பி பார்வையிட்டதில் படகு ஒன்று பழுதாகி நிற்பதை உறுதிப்படுத்திய கடலோரக் காவல் படையினர், அதற்கு அருகாமையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான அன்னிபெசன்ட் கப்பலுக்குத் தகவல் தெரிவித்தனர்.

 

அதன் தொடர்ச்சியாக, அந்த கடல் பகுதிக்கு விரைந்து சென்ற கடலோரக்  காவல் படையினர், நடுக்கடலில் படகுடன் தத்தளித்துக் கொண்டிருந்த, அந்தமான் மீனவர்கள் சின்னசாமி, செல்வநாயகம், கோகுல்ராஜ், ஜேம்ஸ், சரவணன் ஆகிய ஐந்து பேரையும் மீட்டனர். அதையடுத்து, அவர்களை இன்று (19/02/2021) காலை காரைக்கால் தனியார் துறைமுகம் அழைத்து வந்தனர். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் கூறுகின்றனர்.

 

நடுக்கடலில் படகு பழுதானதால் 18 மணி நேரம் தவித்தோம்; நடுக்கடலில் தத்தளித்த எங்களை மீட்ட இந்தியக் கடலோரக் காவல் படைக்கு கோடான கோடி நன்றிகள் என்று அந்தமான் மீனவர்கள் தெரிவித்தனர். 


 

 

சார்ந்த செய்திகள்