பல்வேறு எதிர்பார்ப்புகள், ஆலோசனைகளுக்குப் பிறகு இன்று சுமார் 8 லட்சம் மாணவர்களின் 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியானது. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று காலை 11 மணிக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
மாணவர்கள் அவர்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, dge2.tn.nic.in,dge.tn.gov.in என்ற தளங்களில் அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளியில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு மதிப்பெண்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in இந்த தளத்தில் ஜூலை 22 முதல் மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் முதல்முறையாக தசம எண்களில் வெளியிடப்பட்டுள்ளது.
மதிப்பெண் பட்டியலை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ''விரைவாக மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை வழங்க பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்தனர். தற்பொழுது கொடுக்கப்பட்டுள்ள மதிப்பெண் திருப்தியளிக்காத மாணவர்கள் விரும்பினால் மீண்டும் தேர்வெழுதிக் கொள்ளலாம். தேர்ச்சிபெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 16 ஆயிரத்து 473. அதேபோல் பள்ளிக்கு வராத 1,656 மாணவர்கள் தேர்வெழுதவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை மாணவர் சேர்க்கையில் குழப்பம் நிகழக்கூடாது என்பதற்காக தசம மதிப்பில் முதல் முறையாக மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது''என்றார்.