Skip to main content

துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு; கர்நாடக வனத்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 17/02/2023 | Edited on 17/02/2023

 

 firing; Chief Minister M.K.Stal's condemnation of Karnataka Forest Department

 

தமிழக கர்நாடக எல்லையில் கடந்த 14 ஆம் தேதி 4 பேர் எல்லையில் உள்ள பாலாற்றை பரிசலில் கடந்து நான்கு பேர் துப்பாக்கியுடன் மான் வேட்டையாடச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது கர்நாடக வனத்துறையினர் வந்ததால் வேட்டைக்காரர்களுக்கும் கர்நாடக வனத்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அதில் மூவர் தப்பி கிராமத்திற்கு வந்துவிட்டனர். ராஜா என்கின்ற காரவடையான் என்ற ஒரு நபர் மட்டும் காணாமல் போனார். நேற்று முன்தினம் மாலை கர்நாடக வனத்துறையினர் பாலாற்றில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதே நேரம் கிராம மக்களும் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

இந்நிலையில், பாலாற்றின் தமிழக எல்லையில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அது வேட்டைக்குச் சென்ற ராஜாவின் உடல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சடலம் கிடந்த இடம் ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் காவல்நிலையத்திற்கு உட்பட்டதால் உடலை மீட்பதற்காக பொதுமக்களும் உறவினர்களும் காத்திருக்கின்றனர். நேற்று இரவு மேட்டூர் டிஎஸ்பி மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தணிகாசலம் ஆகியோர் கர்நாடக மாநில வனத்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இன்று ராஜா சடலமாக மிதந்த சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அவர் ஏற்கனவே கர்நாடக வனத்துறை தாக்குதலால் உயிரிழந்து பின்னர் தமிழக பாலாற்று கரையில் வீசப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

 

 firing; Chief Minister M.K.Stal's condemnation of Karnataka Forest Department

 

இந்நிலையில், உயிரிழந்த ராஜா என்கின்ற காரவடையான் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சேலம் மாவட்டம் கொளத்தூர் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா என்ற காரவடையான் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 14ஆம் தேதி காவிரி ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றார்கள் என்றும், அவர்கள் மீது கர்நாடக மாநில வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதால் ராஜா என்ற காரவடையான் உயிரிழந்துள்ளார் எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ராஜா என்கின்ற காரவடையான் உடல் சென்னம்பட்டி வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில வனத்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தில் ராஜாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்