சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே நாட்டு வெடி கிடங்கில் விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே பருத்திக்காடு பகுதியில் நாட்டு வெடி கிடங்கு ஒன்று உள்ளது. இந்த பகுதிக்கு இன்று காலை 8 மணி சுமார் லாரியில் கரித்தூள் மற்றும் பட்டாசு வெடி பொருட்கள் கொண்டு வரப்பட்டது. அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டு பட்டாசு வெடித்து சிதறியது. இதில் லாரியில் இருந்து பட்டாசுகளை இறக்கிக் கொண்டிருந்த தொழிலாளர் ஜெயராமன், கார்த்திக், சசி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மூவரும் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் உறுதி செய்யப்படவில்லை. சம்பவத்தை அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வீராணம், அயோத்தியாப்பட்டணம் பகுதியில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.