ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள வாய்க்கால் மேடு என்ற பகுதியில் பொன்னுசாமி என்பவருக்குச் சொந்தமான ஆயில் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆயில் மில்லில் சமையலுக்குத் தேவைப்படும் அனைத்து வகை எண்ணெய்களும் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வழக்கம்போல் 21ஆம் தேதி இரவு பணியை முடித்துக் கொண்டு தொழிற்சாலையை மூடிவிட்டு ஊழியர்கள் சென்றனர்.
22ஆம் தேதி காலை தொழிற்சாலையில் கரும்புகை வெளியேறுவது கண்டு அப்பகுதி மக்கள் பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால், ஆயில் பேரல்களில் தீ பிடித்ததால் தீ கட்டுக்கடங்காமல் கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.
இதையடுத்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திலிருந்து இரண்டு வாகனத்திலும், சென்னிமலை தீயணைப்பு நிலையத்திலிருந்து ஒரு வாகனத்திலும் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வெகு நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான எந்திரங்கள் தீக்கிரையாகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் ஆய்வுக்கு பிறகு தான் எவ்வளவு மதிப்பிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளது எனத் தெரியவரும். இந்த விபத்திற்கு மின்கசிவு காரணமா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.