வடகிழக்குப் பருவமழை சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பெய்து வருகிறது. இந்நிலையில் பலத்த மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டாலும், அதேபோல் புயல் காற்று உருவாகி மரம் மற்றும் மின் கம்பங்கள் கீழே விழுந்தால் பொதுமக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து தேவையான மீட்பு பொருட்கள் தயார் நிலையில் உள்ளதா? என தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் டிஜிபி பிரிஜ் கிஷோர் ரவி, சிதம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அவரை சிதம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து அவர் மீட்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் மரம் அறுக்கும் கருவி, ரப்பர் படகு, கயிறு, இருள் சூழ்ந்த இடத்தில் மின்சாரம் இல்லாமல் மின் விளக்கு எரிய வைக்கும் மின்விளக்கு கோபுரம் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் நல்ல முறையில் உள்ளதா என்றும் தீயணைப்பு வாகனங்களின் தற்போதைய நிலை எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் தீயணைப்பு வீரர்களுக்குப் பேரிடர் மற்றும் மழைக்காலங்களில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழக முதல்வரின் உத்தரவின் படி அனைத்து நிலையங்களையும் ஆய்வு செய்து வருவதாகவும், வடகிழக்குப் பருவ மழையைச் சமாளிக்கும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும்” கூறினார். அவருடன் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.