தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகேயுள்ள குளக்கட்டாகுறிச்சிக் கிராமத்தில் சிவகாசியைச் சேர்ந்தவரின் காளீஸ்வரி ஃபயர் ஒர்க்ஸ் என்கிற பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. கிராமப்புறங்களின் 39 தொழிலாளர்களைக் கொண்ட இந்த ஆலையிலிருக்கும் 7 அறைகளில் தனித்தனியே பட்டாசு, கம்பி மத்தாப்பு மற்றும் தரைச் சக்கரம், வெடிமருந்துகளுடைய பட்டாசு ரகங்கள் போன்றவை தயார் செய்யப்பட்டு வருகின்றன.
வழக்கப்படி, நேற்று காலையில் 7 அறைகளிலும் தொழிலாளர்கள் பட்டாசுகளை மூலப் பொருள்களைக் கொண்டு தயாரித்துள்ளனர். மதியம் ஒருமணி வாக்கில் நல்ல வெயில். அது சமயம் தரைச்சக்கரம் தயார் செய்து கொண்டிருந்த அறையில் வெப்பம் மற்றும் தரைத்தளம் சூடு காரணமாக வெடிக்கலவை மருந்துகளில் உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்தன. அந்த அறையில் 2 பேர் மட்டுமே பணியிலிருந்திருக்கிறார்கள். தீப்பிடித்த வேகத்தில் அறையிலுள்ள தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் தீப்பிடித்து அறை முழுவதும் நெருப்பு பற்றியதால் அங்கு வேலை செய்து கொண்டிருந்த சீகம்பட்டியைச் சேர்ந்த சேவுக பாண்டியன் (31) சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். உடல் முழுவதும் பலத்த காயம்பட்ட மாரியப்பன் உடனடியாக மீட்கப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். தகவலறிந்த வெம்பக்கோட்டை, கழுகுமலை, சங்கரன்கோவில் உள்ளிட்ட தீயணைப்பு நிலைய வாகனங்கள் தீயணைப்பில் ஈடுபடுத்தப்பட்டன. சுமார் ஒரு மணி நேரமாகப் போராடிய தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர்.
சங்கரன்கோவில் டி.எஸ்.பி. பாலசுந்தரம், தொழிற்சாலை மற்றும் பாதுகாப்பு நல்வாழ்வுத்துறை இயக்குனர் நிறைமதி, துணை இயக்குனர் சஜன் போன்றோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.
பட்டாசு வெடிப்பில் பலியான தொழிலாளி சேவுகபாண்டியனுக்கு திருமணமாகி ஜெயா (30) என்ற மனைவியும், ரமேஷ் (6), ஆகாஷ் (5) என 2 மகன்களும் உள்ளனர்.