தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தையின் கட்டைவிரல் துண்டிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
தஞ்சை மாவட்டம் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் விவசாய வேலை செய்துவருகிறார். இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் ஆன நிலையில், கடந்த 25ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை குறைபிரசவத்தில் பிறந்துள்ளதால், வயிற்றில் கோளாறு இருப்பதால் தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என மருத்துவர்கள் சார்பில் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் குழந்தைக்கு ஊசி மூலமாக குளுக்கோஸ் ஏற்றக் கூடிய பணி என்பது நடைபெற்றுவந்தது. 15 நாட்களாக குழந்தை சிகிச்சையில் இருந்த நிலையில், தற்போது ஆரோக்கியமாக இருப்பதாக கூறி இன்றைய தினம் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.
இதனால் குளுக்கோஸ் ஏற்றுவதற்காக பச்சிளங்குழந்தையின் கட்டைவிரலில் குத்தப்பட்டிருந்த ஊசி பேண்டேஜை கத்திரிக்கோல் மூலமாக செவிலியர் ஒருவர் அகற்ற முயன்றுள்ளார். அப்படி செய்தபோது குழந்தையின் கட்டை விரல் துண்டாகிவிட்டது. தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் தஞ்சாவூர் மட்டுமல்லாமல் அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இங்கு வந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதற்கான தாய் சேய் நலப் பிரிவு இங்கு செயல்பட்டுவருகிறது. இந்நிலையில், செவிலியரின் அலட்சியம் காரணமாக பச்சிளம் குழந்தையின் கட்டைவிரல் துண்டிக்கப்பட்டுள்ளது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுவருவதாக தஞ்சை அரசு மருத்துவமனையின் ஆர்.எம்.ஓ உஷாதேவி விளக்கம் அளித்துள்ளார்.