கரோனா நோய்த்தொற்று பரவலின் முதல் அலை உலகமெங்கும் வீசி முடிந்த நிலையில், இரண்டாம் அலை தொற்று மீண்டும் உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஓரிரு நாட்களில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.
எனவே இந்த மோசமான நிலையைக் கருத்தில் கொண்டு தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள், அந்தந்த மாவட்டங்களில் முகக் கவசம் அணிவதைக் கட்டாயப்படுத்தியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அரசின் இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று வலியுறுத்தியும், அப்படி அணியாமல் இருப்பவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்றும், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவர்களுக்கு ரூ.500 விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மேலும் திருமண மண்டபம், திரையரங்குகள் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான இடங்களில் கரோனா விதிகள் கடைபிடிக்காமல் போனால் அந்த தனிப்பட்ட நிறுவனத்தின் மீது 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், ஒருபக்கம் தேர்தல் அலுவலர்களின் நெருக்கடி, மற்றொரு பக்கம் தொற்று நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைக் குறைக்க இப்படிப்பட்ட அபராதங்களை விதிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்களாகிய நீங்கள் சுய கட்டுப்பாட்டோடு செயல்பட்டு இந்தக் கரோனாவை எதிர்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.