சேலம் காமநதீஸ்வரர் கோவில் நிதியை தவறாக பயன்படுத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலத்தை சேர்ந்த ஏ. ராதாகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சேலம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு காமநாதீஸ்வரர் கோவிலின் நிதி முறைகேடாக கையாளப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். நிதி முறைகேடு குறித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்களை கொண்ட கோவிலின் செயல் அலுவலர் சண்முகம், கோவிலுக்கு சொந்தமான நிதியை சொந்த காரணங்களுக்காக பயன்படுத்தி வருவது குறித்தும் இந்த சமய அறநிலையத்துறை ஆணையருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணை நடத்திய அறநிலையத்துறை, கோவில் நிர்வாகத்திற்கு எதிரான புகாரை முடித்து வைத்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கோவிலின் நிதியை தனது சொந்த காரணங்களுக்காக பயன்படுத்திய அதிகாரிகள் மீதும், தவறிழைத்த அதிகாரிகள் மீதும் குற்ற வழக்கு பதிவு செய்தும், துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் தமிழக அரசிற்கும், அறநிலையத்துறைக்கும் உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், இந்த சமய அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிட்டும், புகார் மீதான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டும் வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.