"எங்க பணத்த புடுங்கிட்டு எங்களுக்கே நோட்டீஸ் அனுப்புறாங்க" என பைனான்ஸ் நிறுவனத்தில் பணத்தை ஏமாந்த பொதுமக்கள் கண்ணீரோடு கமிஷனர் ஆபிசில் புகார் அளித்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகர் பசுமலை பகுதியில் ஜே.ஆர்.ஜே மார்க்கெட்டிங் என்ற பைனான்ஸ் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவராக ஜெயராஜ் என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில், இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று அப்பகுதி மக்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. அதில், தங்களது நிறுவனத்தில் 30 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் அந்த 30 ஆயிரம் ரூபாய் பணத்தை பயன்படுத்தி ஒரு பவுன் தங்கக்காசு வாங்கிக் கொள்ளலாம் எனவும், மேலும் அதில் கிடைக்கும் லாபத்தில் மாதம் 7500 ரூபாய் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.
இதை உண்மை என நம்பிய பொதுமக்கள், மதுரை மாநகரைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த பைனான்ஸ் நிறுவனத்தில் முப்பதாயிரம் ரூபாய் முதல் பல லட்ச ரூபாய் வரைக்கும் முதலீடு செய்துள்ளனர். இதையடுத்து, முதலீடு செலுத்தியவர்களுக்கு மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக மாதம்தோறும் லாப பணமாக 7500 ரூபாய் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த மூன்று நான்கு மாதங்களாக முதலீட்டாளர்களுக்கு லாப பணம் கொடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பணம் கொடுத்தவர்கள் அந்நிறுவனத்தின் தலைவரான ஜெயராஜ் என்பவரை தொடர்புகொண்டு கேட்டபோது, உங்களுடைய பணம் விரைவில் வரும் எனக் கூறியுள்ளார். ஆனால், தொடர்ச்சியாக பல மாதங்கள் ஆகியும் லாப பணம் வராத நிலையில், தங்களுக்கு லாப பணம் வேண்டாம் தாங்கள் கட்டிய டெபாசிட் தொகையை திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர்.
அந்த சமயத்தில், உங்களுடைய பணத்தை திருப்பித் தருவதாக கூறி, டெபாசிட் செலுத்தியதற்கான சீட்டுகளை பெற்றுக்கொண்ட நிலையில், தாங்கள் தான் பணத்தை திரும்ப தர வேண்டும் என டெபாசிட் செய்தவர்களின் வீட்டுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அந்த பைனான்ஸ் நிறுவனம் மீது மதுரை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் மதுரை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.