அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 11- ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி ஜெயச்சந்திரன், பொதுக்குழு செல்லாது என்று அறிவித்ததுடன், ஜூன் 23- ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று கடந்த வாரம் தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீட்டு வழக்கில் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்க ஆட்சேபம் தெரிவித்தது.
நேரடியாக மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், வழக்கில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராக இருப்பதால், இறுதி விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு தள்ளி வைக்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை விடுத்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் வழக்கில் இறுதி வாதங்களை உன் வைக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, மேல்முறையீட்டு வழக்குகளின் இறுதி விசாரணையை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.