
திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்ரோஸ் (38). இவரது மகன் ஸ்ரீசாம். அதேபோல் மூலக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் உஸ்மான். அப்ரோஸ் மகனான ஸ்ரீசாம் மற்றும் உஸ்மான் இருவரும் நேற்று முன்தினம் (02.10.2021) பம்பரம் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது விளையாட்டில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி உஸ்மான், ஸ்ரீசாமை தாக்கினார்.
இதுகுறித்து ஸ்ரீசாம் தனது தாயிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து உஸ்மானிடம் நியாயம் கேட்கச் சென்றபோது, உஸ்மான் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் தனது தம்பியான அல்தாப் (33) என்பவருக்கு செல்ஃபோனில் தொடர்புகொண்டு அப்ரோஸ் விவரத்தைத் தெரிவித்தார்.
அல்தாப்க்கு ஆதரவாக வரகனேரியைச் சேர்ந்த புஷ்பராஜ் மற்றும் முபாரக் வந்து உஸ்மானை தாக்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து புஷ்பராஜ், அல்தாப் ஆகியோரை உஸ்மான் கத்தியால் குத்தினார். இதில் காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அல்தாப் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து உஸ்மான் மற்றும் முபாரக்கை தேடிவருகின்றனர்.