"இது எங்களின் இடுகாடு என ஒரு பிரிவினரும், இல்லையில்லை இது நாங்கள் ஒதுங்குமிடம் என மற்றொரு பிரிவினரும் நீண்ட நெடுநாட்களாக, காலி மைதானத்திற்காக வருடக்கணக்கில் போராடி வந்த நிலையில், அடிதடி கல்வீச்சில் ஆரம்பித்து பெட்ரோல் குண்டு வீச்சில் முடிந்திருக்கின்றது பிரச்சனை.
யாருடைய படம் இந்த சுவற்றில் இடம்பெறவேண்டுமென? அரசியல்வாதிகள் மோதிக்கொள்ளும் "மெட்ராஸ்" படக்கதைப் போல், இது எங்களுக்கான இடம் என காலி மைதானத்தை நோக்கி அரசியல் செய்ய ஆரம்பித்துள்ளது சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலுள்ள இரு சமூகம். "இங்குள்ள ஊர்களும், கிராமங்களும் வடிவம் பெறத் தொடங்கிய காலந்தொட்டு வசிப்பவர்கள் நாங்கள். ஒவ்வொரு ஊரிலும் எங்களுக்கான இடங்கள் உள்ளன.
அந்த வரிசையில் இது எங்களுடைய சமூகத்திற்குட்பட்ட இடம். அதற்கான செப்புப் பட்டயமே இருக்கின்றது. எங்களுக்கு சொந்தமான அந்த இடத்திற்கு உரிமைக் கொண்டாட அவர்கள் யார்? என ஒரு பிரிவினர் கேள்வி எழுப்பி வேலி போட்டு அடைத்து வைக்க, "ஊர் ஆரம்பிப்பதற்கு முன்னரே நாங்களே பூர்வகுடிகள். எங்கள் பெண்டு பிள்ளைகள் ஒதுங்கிய இடத்தினை அவர்கள் அடைப்பது என்ன நியாயம்?" எதிர்க்கேள்வி எழுப்புகின்றனர் மற்றொரு பிரிவினர். இப்படியாக பிரச்சனை எழுந்து வந்த நிலையில், ஒரு பிரிவினரை நோக்கி மற்றொரு பிரிவினர் தாக்குதலைத் தொடங்கினர் ஞாயிற்றுக்கிழமை இரவில்.
காரைக்குடி கோட்டையூர் வசந்தமாளிகை பேருந்து நிலையம் அருகிலுள்ள வீட்டினை முதல்குறியாய் கொண்டு தாக்குதலைத் தொடங்கிய ஒரு சமூகம், அங்கிருந்து முன்னேறி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரத்தின் தம்பி சுப்பையாவையும், அவரது மகன் ஹரிபிரசாத்தையும் அடித்து துவைத்ததோடு மட்டுமில்லாமல் தீ வைத்து கல்வீசி தாக்குதலை நீட்டித்தது. இதனால் கோபமடைந்த தாக்குதலுக்குள்ளான மற்றொரு பிரிவினர் பெட்ரோல் குண்டு மூலம் பதில் தாக்குதலை தொடங்க ஊரே பரபரப்பானது.
தகவலறிந்த காவல்துறை இரவு வேளை என்பதால், போக்குவரத்தையும் மின்சாரத்தையும் நிறுத்திவைத்து விட்டு இருதரப்பிலும் 60க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து கலவரத்தை நிறுத்தியது. 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த இத்தாக்குதலில் கார் மற்றும் வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த தாக்குதலில் கேப்டன் டிவி செய்தியாளரும் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. காவல்துறையினர் இருதரப்பையும் கைது செய்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தாலும் நிலைமை இன்னும் சீராகவில்லை. தொடர்ந்து பதட்டமாக உள்ளதால் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.