Skip to main content

நெடுவாசலில் ஏப்ரல் 12 ந் தேதி நடப்பதாக இருந்த போராட்டம் தள்ளிப் போக வாய்ப்பு

Published on 11/04/2018 | Edited on 11/04/2018

 

​neduvasal



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட், நியூட்ரினோ, நீட் ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகம் மட்டுமின்றி தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் தொடந்து போராட்டங்கள் நடப்பதால் நெடுவாசலில் ஏப்ரல் 12 ந் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த போராட்டம் ஒத்திவைக்க வாய்ப்பு உள்ளதாக உயர்மட்டக்குழு தலைவர் கூறினார்.
 

நெடுவாசல் திட்டம் :
 

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்க கர்நாடகாவைச் சேர்ந்த ஜெம் என்ற தனியார் நிறுவனத்திற்கு மத்திய பெட்ரோலிய துறை கடந்த ஆண்டு பிப்ரவரி 15 ந் தேதி ஒப்பந்தம் வழங்கியது. இந்த அறிவிபப்பை தொடர்ந்து  16 ந் தேதி நெடுவாசல் கடைவீதியில் திரண்ட விவசாயிகள், மாணவர்கள், திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் கையெழுத்து இயக்கம் நடத்தி மாவட்ட ஆட்சியத் தலைவரிடம் மனு கொடுத்தனர்.
 

196 நாட்கள் போராட்டம் :
 

    ஆனால் மத்திய, மாநில அரசுகள் திட்டத்தை ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிடாத நிலையில் போராட்டம் வலுவடைந்து நெடுவாசல் நாடியம்மன் கோயில் திடலில் போராட்டத்தை நடத்தினார்கள். இந்த முதல்கட்ட போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து மாணவர்கள், பல்வேறு சமூக ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்புகள், அரசியல் கட்சிகள், திரைத்துறையினர் என்று தினம் தினம் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அதனால் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்தது. அதே போல நெடுவாசலை சுற்றியுள்ள புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 100 கிராம விவசாயிகள் விவசாய கருவிகள், விளை பயிர்களுடன் வந்து கலந்து கொண்டனர். 
 

    தொடர்ந்து 22 நாட்கள் போராட்டம் நடந்த நிலையில் மத்திய, மாநில அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் நடத்திய பேச்சுவார்த்தையாலும் மாணவர்களின் படிப்பை கருத்தில் கொண்டும் தற்காலிகமாக போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து போட்டதால் மீண்டும் இரண்டாம் கட்ட போராட்டம் தொடங்கி 174 நாட்கள் நடந்தது.
 

    நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவாகவும், தங்கள் கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒ.என்.ஜி.சி. ஆழ்குழாய் கிணறுகளை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வடகாடு, நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு கிராமத்திலும் தொடர் போராட்டங்கள் நடந்தது. அங்கு சென்ற மாவட்ட ஆட்சியர் கணேஷ் 2017 டிசம்பர் இறுதிக்குள் அனைத்து ஆழ்குழாய் கிணறுகளும் அகற்றப்பட்டு விவசாயிகளிடம் நிலம் ஒப்படைக்கப்படும் என்று உறுதிமொழி கடிதம் கொடுத்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.
 

போராட்டம் அறிவிப்பு :
 

    இந்த நிலையில் நெடுவாசல் திட்டம் அறிவித்த ஒரு வருடம் முடிந்த நிலையில் கடந்த பிப்ரவரி 18 ந் தேதி நெடுவாசல் கடைவீதியில் போராட்ட உயர்மட்டக்குழு தலைவர் புஸ்hரஜ் தலைமையில் மெய்யநாதன் எம்.எல்.ஏ மற்றும் அரசியல்கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் முன்னிலையில் சுற்றவட்டார கிராம மக்கள் பங்கேற்ற பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில்.. மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்து அரசாணை வெளியிட வேண்டும். மாவட்ட நிர்வாகம் உத்தரவாதம் கொடுத்தபடி நல்லாண்டார்கொல்லை, வடகாடு, கோட்டைக்காடு கருக்காக்குறிச்சி, வாணக்கன்காடு ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒ.என்.ஜி.சி. எண்ணெய் ஆழ்குழாய் கிணறுகளை அகற்றி நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியதுடன் இந்த தீர்மானங்களை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றாத பட்சத்தில் ஏப்ரல் 12 ந் தேதி மீண்டும் போராட்டம் தொடங்கும் என்று அறிவித்தனர். 
 

போராட்டம் தள்ளிக் போகும்.. 
 

    ஆர்ப்பாட்டத்தில் அறிவித்தபடி ஏப்ரல் 12 ந் தேதி நெடுவாசலில் மீண்டும் போராட்டம் நடத்தப்படுமா என்று உயர்மட்டக்குழு தலைவர் புஸ்பராஜிடம் கேட்ட போது.. என்ன வகையான போராட்டம் நடத்துவது என்று உயர்மட்டக்குழு கூடி முடிவெடுக்க வேண்டியுள்ளது. ஆனால் காலம் குறைவாக உள்ளது. அதாவது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஸ்டெர்லைட், நியூட்ரினோ, நீட் தேர்வு ஆகிய திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழகம் மட்டுமின்றி தமிழர்கள் வாழும் உலக நாடுகள் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது. அந்த போராட்டங்களில் உயர்மட்டக்குழுவினரும் நெடுவாசல் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களும் பங்கேற்று உள்ளதால் நெடுவாசல் போராட்டம் முன்பு அறிவித்த 12 ந் தெதி நடப்பது சாத்தியமில்லை. தள்ளிப் போகும். ஆனால் நிச்சயம் நெடுவாசல் போராட்டம் நடக்கும் அது எப்போது என்ன போராட்டம் என்பது பற்றி உயர்மட்டக்குழு கூடி முடிவெடுத்து அறிவிக்கும். அப்போது அந்த போராட்டம் ஒட்டுமொத்த அரசாங்கமும் திரும்பிப் பார்க்கும் போராட்டமாக இருக்கும் என்றார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"பயிர்கள் மழைநீரில் மூழ்கி, முளைத்தும் அழுகியும் அழிந்து நாசமாகி விட்டன" - பிஆர்.பாண்டியன்

Published on 16/01/2021 | Edited on 16/01/2021

 

p.r. pandiyan about damages in delta districts

 

தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பாதிப்புகளை ஆய்வு செய்து வரும் பி.ஆர்.பாண்டியன் இன்று  புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஆய்வு செய்தபின் பேசும்போது, "தமிழ்நாட்டில் வானிலை மையம் கூட கணிக்க முடியாத வகையில் பருவம் தப்பிய தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் கடலூர் மாவட்டம் முதல் புதுக்கோட்டை மாவட்டம் வரை  டெல்டா பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த 15 லட்சம் ஏக்கர் நெல் பயிர்கள் மழைத்தண்ணீரில் மூழ்கி முளைத்தும் அழுகியும் அழிந்து நாசமாகி விட்டன. இந்த நிலையில் தமிழக அரசு ஒரு ஹெக்டேருக்கு இடுபொருள் செலவாக ரூபாய் 20 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்படும் என்று அறிவித்து கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. இதில் பல கிராமங்கள் விடுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

 

அரசு உடனடியாக அந்த நடைமுறையைக் கைவிட்டுவிட்டு டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் 100 சதவீத இழப்பீடு வழங்க வேண்டும். பாதிப்பின் தன்மையை அரசு உணர்ந்து உடனடியாக உயர்மட்ட குழுவை அமைத்து நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்.  காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு மார்ச் மாதத்திற்குள் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முந்தைய காலங்களில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுத்தார். அதே போல எடப்பாடி அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு பருவம் தப்பிய மழை பாதிப்புகளைக் கணக்கில் கொண்டு பேரிடர் பகுதியாக அறிவித்து உரிய நிதியை வழங்க வேண்டும்" என்றார்.

 

 

Next Story

"நெடுவாசலில் போராட்ட நினைவுத் தூண் அமைக்க வேண்டும்" - பி.ஆர்.பாண்டியன்...

Published on 16/01/2021 | Edited on 16/01/2021

 

p.r.pandiyan reqquest to neduvasal people

 

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய 2017 பிப்ரவரி 15 ந் தேதி மாலை ஒப்புதல் அளித்த நிலையில் 16 ந் தேதி காலை திட்டத்தைக் கைவிடக் கோரி அங்குள்ள கடைவீதியில் விவசாயிகள் 100 பேர் திரண்டு அடையாள ஆர்ப்பாட்டம் செய்து கையெழுத்து இயக்கம் நடத்தினார்கள். அதன் பிறகு இது தொடர் போராட்டமாக மாறியது. நாடியம்மன் கோயில் ஆலமரத்திடல் போராட்டக் களமானது. அதுவரை போராட்டம் என்றால் மறியல், முற்றுகை, ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது தான் வழக்கம். ஆனால் நெடுவாசலில் அப்படியே தலைகீழாக மாறி, போராட்டம் என்பது கலைத் திருவிழா போல நடந்தது. 

 

ஆட்டம், பாட்டம், கலை நிகழ்ச்சிகள், அரசியல் தலைவர்களின் உரைவீச்சு, சினிமா நட்சத்திரங்கள் எனப் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது. போராட்டக்களத்திற்கு வந்தவர்களை இருகரம் கூப்பி வரவேற்று அவர்களுக்கு உணவளித்து உபசரித்தார்கள் போராட்டக் குழுவினர். தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி போராட்டம் செய்தாலும் இந்த நூற்றாண்டில் நடந்த முக்கியமான அமைதி வழி போராட்டங்களில் ஒன்றாக மாறியது. இந்த போராட்டத்தின் நினைவாக நினைவுத் தூண் அமைக்க வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் நெடுவாசல் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். 

 

இது பற்றி அவர் கூறும் போது, "நெடுவாசல் கிராமத்தில் வரலாறு காணாத போராட்டத்தைச் சுதந்திரத்திற்குப் பிறகு இப்பகுதி விவசாயிகள் காந்திய வழியில் நடத்தி உலகத்தின் பார்வையைத் திருப்பி உள்ளனர். எதிர்காலத்தில் இனி விவசாயிகள் வாழ்க்கையே போராட்டமாக மாறி வருகிறது. எனவே நெடுவாசல் போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம் என்பதால், எதிர்கால சந்ததியினருக்கு இப்போராட்டத்தை நினைவு கூறும் வகையில் நெடுவாசல் கிராமத்தில் நினைவுத்தூண் அமைக்க வேண்டும் என நான் கேட்டுக் கொண்டுள்ளேன். விரைவில் அமைப்பதாக  கிராம மக்கள் கூறியுள்ளனர்" என்றார்.