ஈரோடு மாவட்டத்தின் மேற்கு பகுதியில் சத்தியமங்கலம் மலை பகுதியும் வடக்கு பகுதியில் அந்தியூர் மலை காடுகளும் உள்ளது. சந்தன வீரப்பன் உலாவிய இந்த மலையின் நீளம் இரண்டாயிரம் சதுர கிலோமீட்டர். இதில் நூற்றுக்கணக்கான குக்கிராமங்களும் ஏறக்குறைய ஒரு லட்சம் மக்களும் வசிக்கிறார்கள் அப்படியுள்ளதுதான்.
அந்தியூர் மலைப்பகுதியில் உள்ள பர்கூர் மலை, பர்கூர் மேற்கு மலைப்பகுதியில் ஒன்னகரை, தம்புரெட்டி, ஒசூர், கோயில் நத்தம், செங்குளம், சின்ன செங்குளம், கொங்காடை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் இருக்கிறது. இங்குள்ள மலைவாழ் மக்கள் உணவு பொருள், மருத்துவ வசதிக்கு கீழ் பகுதியான அந்தியூர் தான் செல்ல வேண்டும் அடர்ந்த வனப்பகுதி குக்கிராமத்திலிருந்து பல கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து தாமரைக்கரை என்ற இடத்தில் பஸ் ஏறி அந்தியூர் சென்று வந்தனர். தங்களது கிராமத்திற்கு பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும் என சென்ற ஐம்பது ஆண்டுகளாக அரசு நிர்வாகத்திடம் வலியுறுத்தி கேட்டார்கள். பல போராட்டங்களும் நடத்தினார்கள் சென்ற ஆண்டு மக்கள் கோரிக்கையை ஏற்று அரசு பஸ் இக்கிராமங்களுக்கு இயக்கப்பட்டது.
இது மலைவாழ் மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக அமைந்தது. இந்த நிலையில் தாமரைக்கரை கிராமத்திலிருந்து தாளகரை கிராமம் பிரிவு வரை 15 இடங்களில் சிறு பாலங்கள் அமைக்கும் வேலை கடந்த 8 மாதமாக நடைபெற்று வருகிறது. பாலம் கட்டுமான பணிகள் நடைபெறுமிடத்தில் சாலைகள் மிகவும் குறுகலாகவும், குண்டும் குழியுமாக இருப்பதால் இதில் அடிக்கடி வாகனங்கள் சிக்கி கொள்வது வாடிக்கையாக இருக்கிறது. இதற்கிடையே சென்ற பத்து நாட்களுக்கு முன்பு பர்கூர் மேற்கு மலைக்கு சென்று வரும் வந்த அரசு பஸ் பாலம் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் சேற்றில் சிக்கி கொண்டது. இதை காரணம் காட்டி மேற்கு மலைக்கு பஸ் இயக்கப்படுவதை நிறுத்திக் கொண்டது அரசு போக்குவரத்து கழகம் இதனால் பத்து மலைக்கிராமங்களை சேர்ந்த மக்கள் பழையபடி 25 கிலோ மீட்டர் நடந்து தாமரை கரை வந்து பஸ் பிடித்து அந்தியூர் போவதும் பிறகு மீண்டும் 25 கிலோ மீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதியில் நடந்து தங்கள் கிராமத்திற்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மலைப்பகுதியில் ஆங்காங்கே சிறுபாலங்கள் கட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெறாமல் தாமதமான நிலையில் நடந்து வருகின்றது. தற்போது மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் உள்ள மண் சாலையில் சிறு வாகனங்கள் சிக்கி கொள்வது வாடிக்கையாக இருந்து வருகின்றது. இதனால் மலைவாழ் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேறு வழியின்றி மலைவாழ் மக்கள் நடந்து தான் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அரிசி பருப்பு வாங்க கூட ஐம்பது கிலோ மீட்டர் நடக்கனும்ங்க முதியோர் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற கர்பிணி பெண்களை தொட்டில் கட்டி காட்டுக்குள் தூக்கிச் செல்ல வேண்டிய கொடுமைங்க.. அரசு நிர்வாகம் வேகமாக செயல்பட்டால் பத்து நாளில் மீதி உள்ள பணிகளை முடித்து பஸ் விட முடியும் ஆனால் கேட்பது மலை வாசி மக்கள் என்பதால் யாரும் திரும்பிக் கூட பார்க்க மாட்டேன்கிறாங்க" என பரிதாபமாக கூறுகிறார்கள் அப்பாவி மலை வாசிகள்.