திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு இதற்காக சிறப்புப் பேருந்து சேவை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதேநேரம் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பல ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தீபத் திருவிழாவின் போது மலையேறும் பக்தர்களுக்காக வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. முதலில் வரும் 2500 பக்தர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவர் என மாவட்ட நிர்வாகம் முன்னரே அறிவித்திருந்த நிலையில், நவ.26 ஆம் தேதி பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர்; குறைந்தபட்சம் 18 வயது முதல் 60 வயது உள்ளவர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவர்; பேகோபுரம் அருகில் உள்ள வழியாகவே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர்; மற்ற வழிகளில் மலையேற அனுமதி இல்லை; மலையேற அனுமதி கோரும் பக்தர்கள் அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலை சமர்ப்பித்து அனுமதி பெற்றுக் கொள்ளலாம்; மலையேறும் பக்தர்கள் தீப்பெட்டி, சூடம் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதி இல்லை; தண்ணீர் பாட்டில் மட்டும் எடுத்து செல்ல அனுமதி உள்ளது என கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.