செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்திற்கு அருகேயுள்ளது கூடுவாஞ்சேரி. இந்தப் பகுதியில் தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தக் காவல் நிலையத்தில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணியாற்றிய பெண் போலீசார் சிலர், ஒரகடத்தில் உள்ள ஜூஸ் கடைக்குச் சென்றிருந்தனர். அப்போது, அங்கு பணியிலிருந்த ஊழியரை மிரட்டி ஓசியில் ஜூஸ் கேட்டுள்ளனர். இதனால் போலீசாருக்கும் அந்த கடையில் வேலை செய்த நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கம்ப்ளைன்ட் வரைக்கும் சென்றுள்ளது. இதன் காரணமாக, அந்தக் கடையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வேறு இடங்களுக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக மகிதா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் ஆய்வாளராக பதவி ஏற்றிருக்கிறார். இவரிடம், காட்டாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியின் கருக்கலைப்பு வழக்கு ஒன்று வந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தியிருக்கிறார் ஆய்வாளர் மகிதா. இந்த விசாரணையின் முடிவில், 17 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட டாக்டரிடம் பேசிய ஆய்வாளர், ‘இங்க பாருங்க சார்.. நீங்க பண்ணுனது சட்டப்படி மிகப்பெரிய குற்றம்...’ எனப் பேச ஆரம்பித்துள்ளார். மேலும் டாக்டருடன் பேசிய ஆய்வாளர். இந்தக் குற்றச்செயல் பெரிய கேசா ஆகாம நான் பாத்துக்கிறேன். ஆனால் எனக்கு நீங்க 12 லட்சம் ரூபாய் பணம் மட்டும் கொடுங்க எனக் கேட்டதாகத் தெரிகிறது.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அரசு மருத்துவர், பெரும் மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும், இந்த விஷயத்தை தனது நண்பர்கள் சிலரிடம் பகிர்ந்துள்ளார். அப்போது, டாக்டரின் நண்பர்கள் சிலர், ‘சார்.. இது குறித்து தாம்பரம் ஆணையர் அமல்ராஜிடம் கம்ப்ளைன்ட கொடுப்பதுதான் சரி’ எனக் கூறியுள்ளனர். அதன்படி, சம்பந்தப்பட்ட டாக்டர், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், லஞ்சம் கேட்டு தன்னை மிரட்டுவதாக தாம்பரம் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரை பெற்றுக்கொண்ட தாம்பரம் ஆணையர் அமல்ராஜ், இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார். விசாரணையில் ஆய்வாளர் மகிதா, லஞ்சம் கேட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கூடுவாஞ்சேரி ஆய்வாளர் மகிதா அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னை புறநகர் பகுதியாக இருக்கும் மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட காவல் நிலையங்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிக்கடி ஏற்படுவதால், அந்தப் பகுதி மக்கள் போலீசார் மீது பெரும் அதிருப்தியில் உள்ளனர்.