நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் சரணிதாவுக்கும், மருத்துவர் உதயகுமாருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஐந்து வயதில் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த நிலையில் எம்.டி மருத்துவ படிப்பை முடித்த சரணிதா கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் 25 நாட்கள் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். இதற்காக கே.எச் ரோட்டில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி மருத்துவமனைக்கு சென்று வந்திருந்தார்.
இந்த நிலையில் விடுதியில் நேற்று முன்தினம் காலை உணவை அருந்திவிட்டு தனது அறைக்கு சென்ற சரணிதா மதியம் வெளியே வரவில்லை. இதனிடையே சரணிதாவின் கணவர் உதயகுமார் அவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருக்கிறார். ஆனால் பலமுறை போன் செய்தும் சரணிதா அதை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உதயகுமார் விடுதியின் நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பெயரில் சரணிதாவின் அறைக்குச் சென்ற ஊழியர்கள் கதவைத் திறந்து பார்த்துள்ளனர். அங்கு சரணிதா மூச்சுப் பேச்சின்றி மயங்கிய நிலையில் கீழே கிடந்துள்ளார்.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த அயனாவரம் போலீசார் அறையை ஆய்வு செய்தனர். பின்பு விசாரணை நடத்தியதில் சரணிதா லேப்டாப்பிற்கு சார்ஜர் போடும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து சரணிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.