மழை நீரில் மூழ்கி பெண் மருத்துவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நேற்று (17.09.2021) நல்ல மழை பெய்த நிலையில், வெள்ளனூர் பகுதி ரயில்வே தரைப்பாலத்திற்கு கீழே இடுப்பளவு தண்ணீர் தேங்கியிருந்தது. இந்த வழியாக பெண் மருத்துவர் ஒருவர் தனது மாமியாரோடு சென்றுள்ளார். அப்போது கார் பாதி தூரத்தைக் கடந்த நிலையில், வண்டியின் சைலென்சரில் நீர் புகுந்ததால் வண்டி நடுவழியில் நின்றது. இதனால் வண்டிக்குள் நீர் புக ஆரம்பித்தது.
ஒரு கட்டத்தில் கார் மூழ்கும் அளவுக்கு நீரின் அளவு அதிகரித்ததால் அந்தப் பெண் மருத்துவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துள்ளார். அவருடன் வந்த அவரது மாமியார் நீச்சலடித்துத் தப்பித்துள்ளார். மருமகளைக் காப்பாற்ற முயன்றும், அவரால் அது முடியாமல் போனதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையே இன்று காலை அந்த இடத்தில் கூடிய அப்பகுதி மக்கள், நீண்ட நாட்களாக பாலம் கட்டிக்கொடுக்க கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் அதற்கான முயற்சியில் ஈடுபடாததைக் கண்டித்து மறியலில் ஈடுபட்டனர். சாலையில் ஒரு லாரி மரக்கட்டைகளைக் கொண்டுவந்து கொட்டிப் போராட்டம் நடத்திவருகிறார்கள். இதனால் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.