விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வங்கிப் பெண் மேலாளர் காரில் கொலை செய்யப்பட்டு கிடந்த நிலையில், அவருடன் வந்த மற்றொரு வங்கி மேலாளர் வாகனத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக உடலைக் கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கேனிப்பட்டு சாலையில் பரபரப்பாக வாகனங்கள் சென்று கொண்டிருந்த நிலையில், சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்ட காரில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவர் கிடந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த கிளியனூர் போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்து கிடந்தது புதுவை மாநிலம் ரெட்டியார்பாளையம் கரூர் வைஸ்யா வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்த மதுரா என்பது தெரியவந்தது. அந்த இடத்திற்கு அருகிலேயே லாரி மோதி ஒருவர் இறந்து கிடந்தார். அவர் பெயர் கோபிநாத் என்பதும் தெரியவந்தது. கோபிநாத்தும் மற்றொரு கரூர் வைஸ்யா வங்கிக் கிளையின் மேலாளர் என்பது தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் காரில் இறந்து கிடந்த பெண் வங்கி மேலாளர் மதுராவை கொலை செய்தது கோபிநாத் என்பது தெரிய வந்துள்ளது. கோபிநாத் ஸ்க்ரூ டிரைவர் மூலம் குத்தி மதுராவை கொலை செய்துள்ளார். அதன் பிறகு லாரியில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எதற்காக இந்த கொலை மற்றும் தற்கொலை நிகழ்ந்தது என்பது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இருவரும் ஒன்றாக விழுப்புரத்தில் பணியாற்றி வந்த நிலையில், ஒரு வாரத்திற்கு முன்புதான் வங்கி மேலாளராக பதவி உயர்வு பெற்ற கோபிநாத், மரக்காணம் வங்கிக் கிளையில் மேலாளராக நியமிக்கப்பட்டார். புதிய கிளைக்கான பூஜை போடும் விழாவில் இருவரும் பங்கேற்றுள்ளனர். இந்த கொலை மற்றும் தற்கொலை குறித்து கிளியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.