திருச்சி மாநகராட்சி மூலம் ‘நமக்கு நாமே’ என்ற திட்டம் தொடங்கப்பட்டு, தற்போது பொதுமக்களின் பங்களிப்புடன் நீர்நிலைகள் புனரமைப்பு, விளையாட்டுத் திடல் அமைப்பு, திருவிளக்குகள் பொருத்துதல், பூங்கா உருவாக்குதல் மற்றும் மேம்படுத்தல், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், மரக்கன்று நடுதல், மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்துதல், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள கட்டடங்களில் சுற்றுச்சுவர் மற்றும் பிற அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் என்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மொத்த மதிப்பீட்டுத் தொகையில் பொதுமக்களின் பங்களிப்பாக மூன்றில் ஒரு பங்கு தொகையை செலுத்தினால் மீதி தொகையை அரசே ஏற்று பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்தின் கீழ் தனி நபராகவோ குழுவாகவோ குடியிருப்போர் நல சங்கங்கள் மூலமாகவும் பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் பணிகளை மேற்கொள்ளலாம். இதற்கான பொதுமக்களின் பங்களிப்பு தொகையை மாநகராட்சியின் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட பின் மாநகராட்சியின் மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணி மேற்கொள்ளப்படும்.
இந்நிலையில், ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள சாரதி நகர் குடியிருப்போர் நலச்சங்கம், அஸ்வின் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், சங்கிலியாண்டபுரம் அண்ணா நகர் 2வது தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் என இன்னும் பல்வேறு நலச்சங்கங்கள், தெருக்களைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதுவரை 55 லட்சத்து எண்பத்து ஏழாயிரம் ரூபாய் தொகையைக் காசோலையாகவும் வங்கி வரைவோலையாகவும் மாநகராட்சி அலுவலகத்தில் செலுத்தியுள்ளனர். எனவே ‘நமக்கு நாமே’ திட்டத்தின் மூலம் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் அமைத்தல் அல்லது மேம்படுத்துதல் பணிகளுக்கான பங்குதொகையை மாநகராட்சியில் செலுத்தி, உடனடியாக தேவைப்படும் வசதியைப் பொதுமக்கள் மற்றும் நலச்சங்கங்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.