அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே உள்ள கருவேப்பிலை கட்டளை ஊரைச் சேர்ந்தவர் அர்ஜுனன்(48). விவசாயியான இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில், தனது இரண்டு மகன், மூன்று மகள்களுடன் வசித்துவருகிறார். இவர்கள் யாருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இதில் அர்ஜுனனின் இளைய மகன் அருண்(24), திருப்பூர் பகுதியில் தங்கி அங்குள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
திருப்பூரில் தன்னுடன் வேலை செய்யும் பெண்ணை அருண் காதலித்து வந்துள்ளார். அருண் தனது காதல் விவகாரத்தை தனது தந்தையிடம் கூறியுள்ளார். ஆனால், அர்ஜுனன் மகனின் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அருண், தனது தந்தையின் எதிர்ப்பை மீறி அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டு தன் வீட்டிற்கு வந்துள்ளார். இதனைக் கண்டு கோபம் அடைந்த அர்ஜுனன், ‘உன் கூட பிறந்த அக்கா, அண்ணன் ஆகியோருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் நீ திருமணம் செய்து கொண்டது சரியா, இதனால் அக்காவுக்கு மாப்பிள்ளை, அண்ணனுக்கு பெண் கொடுப்பதற்கு பலரும் தயங்குவார்கள். அவர்கள் திருமணம் முடிந்த பிறகு நீ திருமணம் செய்து இருக்கலாமே’ என்று கண்டித்துள்ளார். இதனால் தந்தை மகன் இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது போதையில் வந்த அர்ஜுனன், மகனிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில், கோபம் அடைந்த அருண், கத்தியால் தந்தையை சரமாரியாக குத்தியுள்ளார். அதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அர்ஜுனன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி அறிந்த கீழப்பழுவூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்துகிடந்த அர்ஜுனன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தையை கொலை செய்த மகன் அருணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.