கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதியன்று தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் பாசிமணி விற்றுக்கொண்டிருந்த நரிக்குறவர் சமூகப் பெண்ணிடம் போதையில் சில்மிஷம் செய்த, மணிமுத்தாறு 9-வது பட்டாலியனில் காவலர் பணியிலிருந்த ராமசந்திரன் பற்றிய செய்தியினை நக்கீரன் இணையதளம் வெளியிட்டிருந்தது.
செய்திக்குப் பின்பு உயர்நீதிமன்றக் கிளை தாமதமாக முன் வந்து சம்பவத்தை விசாரித்ததால், ராமச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்த சங்கரன்கோவில் டவுண் காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அதே சமயம் உயர்நீதிமன்றக் கிளையின் விசாரணையின் போது காவலர் ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அது குறித்து விளக்கமளிக்க சங்கரன்கோவில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதிக்கும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் காவலர் ராமச்சந்திரன் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெரிய கோவிலான் குளத்திலிருக்கும் தன்னுடைய மாமனார் நம்பிராஜனைப் பார்ப்பதற்காக அவர் வீட்டிற்கு வந்திருக்கிறார். அது சமயம் தனது கடைவேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய நம்பிராஜன் பைக்கை தன் வீட்டு முன்பு நிறுத்திவிட்டு வெளியே சென்றவர், சற்று நேரத்தில் திரும்பி வந்து பார்த்த போது பைக்கைக் காணவில்லை.
இதுகுறித்து அவர் சின்னக்கோவிலான்குளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அதையடுத்து, காவல்துறையினரும் விசாரணை செய்தனர். அந்நேரத்தில் குருக்கள்பட்டிப் பகுதியில் திருட்டு பைக்கை விற்பனை செய்வதாக தகவல் கிடைக்க காவல்துறையினர் விரைந்த போது, தொடர்புடையவர்கள் தப்பியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து விசாரணை செய்த காவல்துறையினர், திருட்டு பைக்கை விற்க முயன்றவர் சங்கரன்கோவிலை அடுத்த சில்லிகுளத்தைச் சேர்ந்த முத்துப் பாண்டியன் மகன் ராமச்சந்திரன் என்று தெரியவர அவரைத் தேடினர். தீவிரத் தேடலில் குருக்கள்பட்டியருகே தலைமறைவாக இருந்த காவலர் ராமச்சந்திரனைக் கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து பைக்கையும் மீட்டனர்.
கைதான ராமசந்திரன் ரிமாண்ட் செய்யப்பட்டார். இதில் வேறு யாருக்கும் தொடர்பு உண்டா என விசாரணை நடப்பதாகவும் சின்னக்கோவிலான்குளம் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். தனது மாமனார் பைக்கையே திருடி மாட்டியிருக்கிறார் காவலர் ராமச்சந்திரன்.