கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே உள்ள கூகையூர் சாலை பகுதியில் பெரியசாமி(55 வயது) என்பவர் பெரிய ஆயில் மில் வைத்து நடத்தி வருகிறார். இந்த மில்லில் கடலை, எள் போன்ற எண்ணெய் வித்துக்களை வாங்கி அதைப் பிழிந்து எண்ணெய்யாக விற்பனை செய்து வருகிறார். பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வருகிறார்.
இதற்காக அவர் அப்பகுதியில் உள்ள 36 குடோன்களை வாடகைக்கு எடுத்துள்ளார். இந்த குடோன்களில் விவசாயிகளிடமிருந்து வாங்கப்படும் நிலக்கடலை, எள் ஆகிய தானியங்களை சேமித்து வைப்பது வழக்கம். அப்படி ஆயிரக்கணக்கான டன் தானியங்களை வாங்கி சேமிக்கும் பெரியசாமி, அந்த தானியங்களைக் காட்டி சேலம், ஆத்தூர் போன்ற பகுதிகளில் உள்ள தனியார் வங்கிகளில் போலி ஆவணங்களை தயார் செய்து கொடுத்து, அவரது தந்தை தங்கவேல், அவரது மனைவி தங்கம், இவர்களது மகன் பாலுசாமி மகள் சரண்யா போன்ற தனது ரத்த சம்பந்தமான உறவினர்கள் 46 பேர்களின் பெயரில் போலியான டாக்குமெண்ட்களை தயார் செய்து கொடுத்து சம்பந்தப்பட்ட வங்கிகளில் இருந்து 24 கோடியே 33 லட்சத்து 64 ஆயிரத்து 251 ரூபாய் அடமான கடன் பெற்றுள்ளார். தற்போது அவர் கடன் பெறுவதற்கு அளித்த சான்றுகள் அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் என்பதும் அந்தப் போலி ஆவணங்களைக் கொடுத்து மோசடியாக பணம் பெற்றுள்ளதும் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து குடோன் உரிமையாளர் ஜெயராமன் என்பவர், சின்ன சேலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரினை மாவட்ட குற்றப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு, குற்றப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்ட் பாலசுப்பிரமணியன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், போலி ஆவணங்கள் கொடுத்து வங்கிகளில் பண மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. மோசடி செய்தது உறுதியான நிலையில் பெரியசாமி, மகன் பாலுசாமி, கரை கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், நா.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மற்ற நபர்களையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.