ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் பன்னாரியம்மன் என்ற தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு ஈரோடு, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கரும்பு பயிரிட்டு அரவைக்கு அனுப்புகின்றனர்.
இந்த ஆலை நிர்வாகம் கடந்த 4 ஆண்டுகளாக விவசாயிகளிடம் கரும்பு டன் ஒன்று ரு.1325 நிலுவைத்தொகையாக பிடித்தம் செய்துள்ளது. இந்நிலையில் ஆலைநிர்வாகம் ரு.1325 வழங்குவதற்கு பதிலாக ரு.130 மட்டுமே நிலுவைத்தொகை வழங்கி விவசாயிகளிடம் ஒப்பந்தப் படிவத்தில் கையொப்பம் பெற்றது. இதனால் விவசாயிகள் ஒப்பந்த படிவத்தை திருப்பி வழங்க வேண்டும், பிடித்து வைத்த நிலுவைத்தொகையை முழுவதுமாக வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 நாட்களாக ஆலை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஆலை நிர்வாகம் மற்றும் விவசாயிகள் தரப்பு அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் இன்று மதியம் நிலுவைத்தொகை வழங்ககோரி ஆலைவளாகத்தில் நுழைந்தனர்.
இதன்காரணமாக ஆலைநிர்வாகத்தினருக்கும் விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆலைக்குள் நுழைந்த 44 விவசாயிகளை வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயி சுப்பிரமணியத்திற்கு காயம் ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தது அப்பகுதி விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளுக்கு சேரவேண்டிய நிலுவைத்தொகை கேட்டு போராடிய விவசாயிகளை கைது செய்த போலீசார் மற்றும் ஆலைநிர்வாகத்தை கண்டித்து பெரிய அளவிலான போராட்டங்கள் நடத்தப்படும் என விவசாய அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அத்துமீறி ஆலை வளாகத்தில் நுழைந்த விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆலைநிர்வாகத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளதால், 44 விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அந்தப் பகுதியிலும் ஈரோடு மாவட்ட விவசாயிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- ஜீவாதங்கவேல்
Published on 15/02/2018 | Edited on 15/02/2018