தமிழக அரசு சார்பில் கடலூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணி மற்றும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஆய்வு செய்வதற்கு தமிழக அரசின் முதன்மை செயலாளரும் வேளாண்மை துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நடைபெற்று வரும் பணிகளை நேற்று கடலூரில் பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து காலையில் கடலூர் அருகே கம்மியம் பேட்டை பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றில் கரையை பலப்படுத்தும் பணி, குறிஞ்சிபாடி, மிராளுர், கல்குணம், நந்திமங்கலம், கொடிப்பள்ளம், நஞ்சமகத்து வாழ்க்கை உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் குடிமராமத்து பணிகள் மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குடிமராமத்து பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பதனை ஆய்வு செய்ய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, ஆகிய மாவட்டங்களுக்கு என்னை நியமித்து உள்ளனர். முதல் கட்டமாக கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்து வருகிறேன். மாவட்டத்தில் வெள்ள தடுப்பு பணிக்காக ரூ.140 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் கெடிலம் ஆற்றில் இருபுறமும் நிரந்தரமாக கரையை பலபடுத்தும் பணி, சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடலூர் நகரில் உள்ள கெடிலம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் போது வெள்ளம் ஊருக்கு புகாமல் நிரந்தரமாக தடுக்கப்படும். மாவட்டத்தில் பரவனாறு, செங்கால் ஓடை, பழைய கொள்ளிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் பெருமாள் ஏரி, வாலாஜா ஏரி, வெலிங்டன் ஏரி, வீராணம் ஏரி, ஆகிய ஏரிகளில் தமிழக அரசு மற்றும் என்.எல்.சி. நிறுவனமும் இணைந்து தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.
இதுவரை 20 சதமான மராமத்து மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகள் நடந்துள்ளது. பணிகளை விவசாயிகளே செய்வதால் நல்லமுறையில் உள்ளது. விவசாயிகளும் இதனை வரவேற்றுள்ளனர். பல இடங்களில் விவசாயிகளின் ஆலோசனைகளை கேட்டு செயல்படுத்தி வருகிறோம். நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை பார்க்கும் விவசாயிகள் அவங்க ஊரில் உள்ள குளங்களையும், முக்கிய நீர் தேக்கத்தை குடிமராமத்து திட்டத்தில் பணிகளை செய்யுங்கள் என்று கூறுகிறார்கள்.
இதனை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தூர்வாரப்பட்ட வாய்கால்களில் ஆகாய தாமரை செடிகள் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கிறது. இதனை அழிக்க கேமிக்கல் பொருட்களை பயன்படுத்த முடியாது. அதனால் அழிக்க காலதாமதம் ஆகிறது. விரைவில் செடிகளை முழுவதும் அழிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இவருடன் மாவட்ட ஆட்சியர் தண்டபாணி, மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா, சப்- கலெக்டர் சரயூ, சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், வட்டாட்சியர் அமுதா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்பரசு உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.