அரியலூர் மாவட்டம் திருமானூர் டெல்டா பகுதியான கீழக்காவட்டாங்குறிச்சி பகுதியில் விவசாயிகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட்டு டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக அரசுக்கு நூதன முறையில் நெல்வயலில் விளைந்த நெல்மணிகளால் வரைந்து நன்றி தெரிவித்தனர்.
மேலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்காக டெல்டாவை சுற்றி போடப்பட்டுள்ள ஓஎன்ஜிசி உள்ளிட்ட பிற கம்பெனிகளின் ஆய்வு என்ற பெயரில் அமைக்கப்பட்ட அனைத்து ஆழ்துளை கிணறுகளையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் தொழில் மட்டுமே செய்யவேண்டும். டெல்டா பகுதிகளில் ஏற்கெனவே அரியலூர் மாவட்டத்தில் புதுக்குடி கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அமைக்கப்பட்ட தளவாடப் பொருட்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். அதேப் போல குருவாலப்பர் கோவில் அருகே அமைந்துள்ள ஓஎன்ஜிசி ஆழ்துளை கிணறுகள் மூடப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர் மற்றும் திருமானூர் பகுதி டெல்டாவில் வந்தாலும் ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமத்தில் ஓஎன்ஜிசி ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்பகுதி தா.பழூர் டெல்டா பகுதிகளில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் தான் உள்ளது. எனவே அரசு டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என கூறிவிட்டு எதிர்காலத்தில் அனுமதி அளிக்கும் வாய்ப்பை தராத வகையில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் கருப்பு, சதீசு, வைரம், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகி வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.