சிதம்பரம் கடைமடைப் பகுதியில் கொள்ளிடம் ஆற்று வெள்ள நீர் மற்றும் தற்போது பெய்யும் மழைநீரால் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள், நாற்றங்கால் அழுகியுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சிதம்பரம் அருகே காவிரி டெல்டா பகுதியின் கடைமடைப் பகுதியாக உள்ள தெற்கு பிச்சாவரம், வடக்கு பிச்சாவரம், உத்தமசோழமங்கலம், கீழச்சாவடி, கிள்ளை, நஞ்சமகத்துவாழ்க்கை, கீழதிருக்கழிப்பாலை, மேலத்திருக்கழிப்பாலை, பிச்சாவரம், கணகரப்பட்டு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு உட்பட்ட வயல்களில் தற்போது சம்பா நடவு பணியும் நடவுக்கான நாற்றங்கால் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் காவிரி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், கொள்ளிடம் ஆற்றுத் தண்ணீர் கடலில் வடியாமல் எதிர்த்து பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள் வழியாக வந்ததால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களின் வயல்களில் நடவு மற்றும் நாற்றங்காலில் தண்ணீர் தேங்கி பயிர்கள் மூழ்கியுள்ளது.
மேலும் தற்போது சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் மழை தண்ணீரும் கொள்ளிடம் தண்ணீரும் ஒன்றாக வயலில் தேங்கி நிற்பதால் நாற்றங்கால் முழுவதுமாக அழுகிவிட்டது. நடவு நட்டு 20 நாட்கள் ஆன நெற்பயிர்கள் மூழ்கி வீணாகியுள்ளது. எனவே தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கான்சாகிப் பாசன வாய்க்கால் சங்கத் தலைவர் கண்ணன் கூறுகையில், "கொள்ளிடம் ஆற்றில் சென்ற தண்ணீர் மற்றும் சிதம்பரம் பகுதியில் பெய்யும் மழைநீர் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடவு மற்றும் நாற்றங்காலில் தேங்கி நிற்பதால் நாற்றங்கால் முழுவதும் அழுகிவிட்டது. நாற்றங்கால் முழுவதும் அழுகிவிட்டதால் தற்போது நடவு பணிக்கு நாற்று இல்லை. இது குறித்து சிதம்பரம் உதவி ஆட்சியர், வட்டாட்சியர், வேளாண் அலுவலர்கள் உள்ளிட்டவர்களுக்கு நேரடியாகச் சென்று மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே இதனைக் கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வரும் ‘நவரை’ பருவத்திற்காவது விவசாயிகள் நல்ல முறையில் மகசூல் பெற அரசு தேவையான விதை நெல், உரம், ஜிப்சம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்" எனக் கூறினார்.