கடலூர் மாவட்டம் பெண்ணாடம் இறையூர் அம்பிகா சர்க்கரை ஆலை முன் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர், கடந்த 18- ஆம் தேதி முதல் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2017- 2018 ஆம் ஆண்டு அரவை பருவத்திற்கு இறையூர் அம்பிகா, எ.சித்தூர் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். அதேபோல் விவசாயிகளின் பெயர்களில் வங்கியில் கடன் வாங்கிய ஆலை நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆலை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 12 மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றாவிட்டால், வருகின்ற அக்டோபர் 3- ஆம் தேதி முதல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.