கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 700 ஏக்கர்களுக்கும் மேற்பட்ட பரப்பளவில் பன்னீர் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை மற்றும் அதையொட்டி வரும் ஆற்றுத்திருவிழாக்களை முன்னிட்டு கரும்புகள் அறுவடை செய்யப்படும். விவசாயிகளிடம் இருந்து பன்னீர் கரும்பை வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் சென்று சில்லறையில் விற்பனை செய்வர்.
கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பன்னீர் கரும்பு கொடுக்கும் நடைமுறை வழக்கத்திற்கு வந்தது. கடந்த ஆண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பன்னீர் கரும்பு வழங்கியது. பன்னீர் கரும்பை அரசு கொள்முதல் செய்து வந்ததன் காரணமாக விவசாயிகளுக்கு மொத்தமாக பணம் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்தனர். இதை நம்பி பன்னீர் கரும்பு விவசாயிகள் தங்களின் சாகுபடி பரப்பளவை இந்தாண்டில் விரிவுபடுத்தியிருந்தனர். பொங்கல் பண்டிகை நெருங்கி வந்த நிலையில், அரசிடமிருந்து பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அறிவிப்பு வராததால், பன்னீர் கரும்பு விவசாயிகள் கலக்கத்தில் இருந்தனர். இந்நிலையில், தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரூ.1000 பணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை கேட்ட பன்னீர் கரும்பு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து கடலூர் அருகே உள்ள குள்ளஞ்சாவடி, சமுட்டிக்குப்பம், கிருஷ்ணன்பாளையம், புலியூர், காட்டுசாகை, அம்பலவாணன்பேட்டை, கிருஷ்ணகுப்பம், கட்டியங்குப்பம், நடுவீரப்பட்டு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பன்னீர் கரும்பு விவசாயிகள் 400-க்கும் மேற்பட்டோர் கடலூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குள்ளஞ்சாவடி நான்கு முனைச் சந்திப்பு அருகே ஒன்று திரண்டனர். அவர்கள் ஒரு கையில் பன்னீர் கரும்பு, மறு கையில் பூச்சி மருந்தை ஏந்தி சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது, கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுத்தும்; சாலையில் இலை இல்லாமல் பரிமாறப்பட்ட உணவையும் அதனருகில் பூச்சி மருந்து பாட்டிலை வைத்தும்; கரும்புக் கட்டை படுக்கவைத்து ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு சாலைமறியலில் ஈடுபட்ட பன்னீர் கரும்பு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அரசு பன்னீர் கரும்பை கொள்முதல் செய்யவில்லை என்றால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும். இதனால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். எனவே, அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பை இணைத்து வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனர். கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனக் கோட்டாட்சியர் கூறியதையடுத்து, பன்னீர் கரும்பு விவசாயிகள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் கரும்பு விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் போராட்டத்தால் கடலூர் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.