ஈரோடு வெண்டிபாளையத்தில் உள்ள நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தின் முன்பு இன்று காலை கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் வந்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழ்பவானி கால்வாயில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கவும், அதற்கான அரசாணையை உடனடியாக வெளியிடவும் வலியுறுத்தி கோஷமிட்டனர். கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் சீரமைப்பு திட்டத்தை கைவிடவும், அதற்கான அரசாணை எண் 276ஐ ரத்து செய்யவும் கோரிக்கை விடுத்தனர். மேலும் தற்போது நடைபெற்று வரும் கால்வாய் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்கவும், விவசாயிகளிடம் கருத்து கேட்காமல் தயாரிக்கப்பட்ட மோகன கிருஷ்ணன் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும். காலிங்கராயன், தடபள்ளி - அரக்கன் கோட்டை, கீழ்பவானி கால்வாய்களில் ஒரே சமயத்தில் தண்ணீர் திறக்க வேண்டும். பவானி ஆற்றில் கூடுதலாகத் தண்ணீர் திறப்பதை நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்படவில்லை என்றால், சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து கீழ்பவானி பாசன பகுதிகளான ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கால்நடைகள் மற்றும் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் நீர்வளத்துறை அலுவலகத்திற்குச் சென்று தங்களது கோரிக்கைகளை மனுவாக வழங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆற்றல் அசோக்குமார் உள்படப் பல்வேறு விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.