கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி 2-வது அனல் மின் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கங்களின் சார்பில் என்எல்சி அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை தராத கர்நாடகா அரசை கண்டித்தும் நெய்வேலியில் இருந்து கர்நாடகாவிற்கு வழங்கும் மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தினார்கள்.
இதில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், வீராணம் ஏரி பாசன சங்கம், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சங்கங்கள் இணைந்து 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை நெய்வேலி டிஎஸ்பி ராஜ்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இது குறித்து விவசாயிகள், விளை நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைத்து கர்நாடகாவிற்கு கொண்டு செல்லும் மின்சாரத்தை, விவசாய நிலங்களில் உள்ள கோபுரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அறிவித்தனர்.