சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் குறுவை சாகுபடி முடிந்து அறுவடை செய்த நெற்களை கிராமப்பகுதிகளில் குவியலாக குவித்து, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விற்பனை செய்வதற்கு வைத்துள்ளனர். ஆனால் சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேவையான இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படாததால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்களை வைத்துக்கொண்டு சிரமப்படுகிறார்கள்.
இந்த நிலையில் நளம்புத்தூர் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும் அறுவடை செய்யாத நிலையில் பல ஏக்கர் உள்ளது. எனவே அந்த கிராமத்தில் நேரடி கொள்முதல் நிலையத்தை அமைத்து விவசாயிகளிடம் நெல்களை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், இதுவரை கொள்முதல் நிலையம் அமைக்காததால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் அனைவரும் சிதம்பரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்திற்கு செவ்வாயன்று திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்குள்ள அதிகாரிகள் இன்று அல்லது நாளைக்குள் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பெயரில் விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர். இதில் விவசாயி அத்திபட்டு மதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் மாசிலாமணி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.