நாகை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக புயல், பெரும் மழை என வெளுத்து வாங்கியது, அதில் கடைசி 10 தினங்கள் தொடர்ந்து பெய்த கனமழையில் அறுவடைக்குத் தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான நெற்பயிர்களும், கதிர்வரும் தருவாயில் இருந்த பயிர்களும் நீரில் மூழ்கி சாய்ந்து நாசமாகின.
விரக்தியடைந்த விவசாயிகள் போராட்டம், ஆர்ப்பாட்டம் என களமிறங்கி வருகின்றனர். போராட்டத்தின் ஒருபகுதியாக, நாகை மாவட்டம் கூத்தூர் கிராம விவசாயிகள் அழுகிய நெற்பயிர்களுடன் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதித்த நெற்பயிர்களை இதுவரை கணக்கெடுப்பு நடத்தாத அதிகாரிகளைக் கண்டித்தும், விரைந்து நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
"கூத்தூர், பட்டமங்கலம், தேவூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 500 க்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி நாசமாகிவிட்டது, அதனை ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்," என்கிறார்கள் விவசாயிகள்.