"அம்மாவுக்கு உடம்புக்கு சரியில்ல, எனக்கு உடம்புக்கு சரியல்ல," அதனால் எனக்கு ஒரு நாள் விடுப்பு வேண்டும் என்று விடுப்பு கடிதம் கொடுக்கும் மாணவ சமுதாயத்தை தான் பார்த்திருப்போம். ஆனால் நாகையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் கல்லூரி துறைத்தலைவருக்கு எழுதிய விடுப்பு கடிதத்தில் "நான் நாளைய தினம் நடிகர் அஜித் குமார் நடித்து வெளியாக உள்ள நேர்கொண்ட பார்வை படத்தைக் காண செல்வதால் தனக்கு விடுமுறை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்," என எழுதி கொடுத்திருக்கிறார்.
அந்த கடிதத்தை பார்த்து கோபமடைந்த துறைத்தலைவர் கடிதத்தை நிராகரித்து, அக்கடிதத்திலேயே அந்த மாணவனிடம் நாளை கல்லூரி வரும் போது பெற்றோரை அழைத்துக்கொண்டு வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக விடுப்பு எடுத்த நிலை மாறி திரைப்படம் பார்க்க செல்வதற்கே விடுமுறை கடிதம் எழுதிக்கொடுக்கும், இக்கால இளைஞர்களின் நிலையைக் கண்டு கல்வியாளர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் புலம்புகின்றனர்.
தமிழ் சினிமா திரையுலகில் முக்கிய நடிகராகவும், இளைய தலைமுறை ரசிகர்கள், வயதானவர்கள் என அதிக ரசிகர்களை கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார். அவர் நடிப்பில் உருவாகியுள்ள "நேர்கொண்ட பார்வை" திரைப்படம் இன்று (08/08/2019) உலகெங்கும் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை காண அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு திரையரங்கங்களில் டிக்கெட்களை எடுப்பதற்கு கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் குவிந்து வருகின்றனர்.