விவசாயிகளுக்கான 'பிரதமரின் கிசான் சம்மன் நிதி உதவி' திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட தற்காலிக பணியாளர்கள் 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
கடந்த 2018-ம் ஆண்டு பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6,000 நிதி உதவி, 2,000 ரூபாய் என மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.
அதேசமயம் இந்த திட்டம் ஒருசிலருக்கு மட்டுமே செயல்படுத்தப்படுவதாகவும் பல விவசாயிகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்படவில்லை எனவும் புகார்கள் எழுந்ததையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் பயனாளிகளை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக மாவட்ட, வட்டார அளவிலான வேளாண்துறை அதிகாரிகள் பயனாளிகளை தேர்வு செய்யலாம் என விதிமுறை திருத்தப்பட்டது. அதற்காக அந்தந்த பகுதி வேளாண் துறை அதிகாரிகளுக்கு ரகசிய பாஸ்வேர்டும் வழங்கப்பட்டது. வேளாண்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட வலைத்தள ரகசிய குறியீட்டு எண்களை மோசடி பேர்வழிகள் திருடி விவசாயிகள் அல்லாத நபர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு பயனாளிகளாக இத்திட்டத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அதையடுத்து பலரது கணக்குகளில் 2000 ரூபாய் முதல் தவணையாக 3 மாதங்களுக்கு முன்பு வரவு வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 10-ஆம் தேதி இத்திட்டத்தில் 6-ஆவது தவணை தொகையான ரூபாய் 17, 500 கோடியை பிரதமர் மோடி விடுவித்தார். அப்போது மோசடியாக சேர்க்கப்பட்டவர்கள் வங்கி கணக்கில் இரண்டாவது தவணை தொகை ரூபாய் 2000 வரவு வைக்கப்பட்டது.
இந்த திட்டத்தில் கடலூர், விழுப்புரம், வேலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் விவசாயிகள் அல்லாதவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு பெயர்கள் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தில் 1.79 லட்சம் விவசாயிகள் சேர்க்கப்பட்டு பயன்பெற்று வரும் நிலையில் கடந்த சில மாதங்களில் புதிதாக 60,000 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் மோசடியாக 40,000 பேர் சேர்க்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. இவர்களுக்கு சமீபத்தில் வங்கி கணக்கில் முதல் தவணையாக 2000 ரூபாய் பணமும் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் கோடிக்கணக்கான ரூபாய்கள் முறைகேடாக பல்வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடலூர் அடுத்த காரைக்காடு ஊராட்சிக்குட்பட்ட பிள்ளையார்மேடு பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நிலம் இல்லாதவர்கள் விவசாயிகளாக பெயர்கள் சேர்க்கப்பட்டு தவணைத் தொகையும் வழங்கப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு புகார்களும், மாவட்டம் முழுவதிலும் பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்ததையடுத்து விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றன.
அதன்படி வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை மற்றும் காவல் துறை இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் ஆத்மா திட்டத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களான கம்மாபுரம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பாக்கியராஜ், நல்லூர் வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர் சரவணன் மற்றும் கீரப்பாளையம் வட்டாரத்தில் பயிர் காப்பீட்டுத் திட்ட தற்காலிக பணியாளர் சுந்தர்ராமன் ஆகியோர் முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. அதையடுத்து இவர்கள் மூவரையும் பணிநீக்கம் செய்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டுள்ளார். மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்த அரசுத்துறை அதிகாரிகள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.