திருநகரி கிராமத்தில் விவசாயிகளை அலட்சியமாக பேசிய அதிகாரி ஒருவரை அங்குள்ள இளைஞர்கள் அடித்து, உதைத்து ஓட ஓடவிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருநகரியில் விவசாய நிலங்களின் நடுவே விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி கெயில் நிறுவனம் குழாய் பதித்துள்ளது. மாதானம் முதல் மேமாத்தூர் வரை 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய் பதித்துவரும் பணிக்கு விவசாயிகள் கடந்த மாதத்தில் இருந்தை பெரும் எதிர்ப்பை காட்டிவருகின்றனர்.
இந்தநிலையில் குருவை சாகுபடியை இழந்த விவசாயிகள் மழையையும், காவிரி தண்ணீரையும் நம்பி ஒரு போக சாகுபடிக்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். திருநகரி கிராமத்தில் எதிர்ப்பையும் மீறி இரண்டுமாதங்களாக விளைநிலத்தில் மீண்டும் ஓஎன்ஜிசி நிறுவனம் ஆயில் குழாய் பதித்து வருகிறது. குழாய் பதிக்க தோண்டும் குழியை உடனே மூடாமல் அப்படியே போட்டு வைத்துள்ளனர். இதனால் காவிரி நீர் வந்தடைந்தும் சம்பா சாகுபடியை துவங்க முடியாமல் பல விவசாயிகள் பாதிக்கபட்டனர்.
இது குறித்து ஓஎன்ஜிசி அதிகாரிகளிடம் முறையிட்டனர் விவசாயிகள். ஆனால் அதிகாரிகளோ அலட்சியமாக பேசி அலைகழித்தனர். குழியை உடனே மூடாமல் இப்படி பேசுவதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என ஆத்திரம் அடைந்த விவசாயிகள் குழாய் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்தியதுடன், சாகுபடி பணிகள் முடிந்த பின்னர்தான் பணியை தொடர வேண்டும் என்றனர். பிரச்சனைக்குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விவசாயிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி நாளை காலைக்குள் பணிகளை முடித்துவிடுவதாக உறுதியளித்தனர்.
அப்போது அங்குவந்த ஓஎன்ஜிசி நிறுவன அதிகாரி ஒருவர் கிராம மக்களிடம் அதெல்லாம் நாளைக்கி முடியாதுங்க என்பதுபோல அலட்சியமாக பேசியதுடன், வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். அவரின் பேச்சைக்கேட்டு ஆத்திரமடைந்த இளைஞர்கள் சிலர் அவரை அங்கிருந்து அடித்து, உதைத்து விரட்டினர்.
இச்சம்பவத்தால் அந்த பகுதியே பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பிறகு ஓஎன்ஜிசி ஊழியர்கள், கிராம மக்களை சமாதானபடுத்தி அனுப்பினர்.