
மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தமிழகத்தில் 'விவசாய சங்கமம்' என்கிற பெயரில் விவசாய மாநாட்டை திருவண்ணாமலை நகரில் அக்டோபர் 11ந்தேதி நடத்தியது. மாநில மாநாடு போல் நடந்த இந்த விவசாய மாநாட்டுக்கு வடமாவட்டங்களின் பல பகுதிகளில் இருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரும், விவசாயிகளும் வந்து கலந்துக்கொண்டனர். இதில் 3, விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக பா.ஜ.க அரசை கண்டித்தும், உத்திரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.கவின் யோகி ஆட்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது குறித்து என 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த விவசாயிகள் சங்கமம் நிகழ்வு திருவண்ணாமலை- பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில், தனியார் ஒருவரின் 10 ஏக்கர் நிலத்தை நிரவி பெரிய பந்தல் அமைத்து நடந்தது. இதில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், செயல்தலைவர்கள் ஜெயக்குமார், மோகன்குமாரமங்களம், எம்.பி ஜோதிமணி என பல முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் வந்திருந்தனர். அதேபோல் தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசு உட்பட பல முன்னணி தலைவர்கள் கூட்டத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.
மாநாட்டில் மத்திய பா.ஜ.க அரசின் விவசாய விரோத சட்டத்தை ஏன் எதிர்க்கிறோம் என்கிற தலைப்பில், காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி தொகுத்த புத்தகம் வெளியிடப்பட்டது. அதனை தேசிய பொதுச்செயலாளர் பிரசாத் வெளியிட, மாநில காங்கிரஸ் செய்திப்பிரிவு தலைவர் கோபண்ணா பெற்றுக்கொண்டார். மாநில தலைமையுடன் ஆலோசனைப்படி திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த தொண்டர்களை பார்த்து நிகழ்வுக்கு வந்திருந்த காங்கிரஸ் தலைவர்களே ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை நகர காவல்துறை அனுமதி தரவில்லை என்பது குறிப்பிடதக்கது. வாய்மொழி அனுமதியை மட்டும் வைத்துக்கொண்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் ஆரம்பத்தில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. அதன்பின் கூட்டத்தை பார்த்துவிட்டு மதியத்தில் இருந்து 50க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.