கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய விவசாயிகள் சங்கத் தலைவர் மாதவன், "என்.எல்.சி புதிய சுரங்கம் மற்றும் புதிய நிலக்கரி திட்டத்திற்காக கடலூர் மாவட்டத்தில் 90 ஆயிரம் ஏக்கர் நிலம் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. வீராணம் ஏரி பகுதியில் நடைபெற்ற ஆய்வுகளின் அடிப்படையில் இந்த செய்தி உலா வருகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய பதில் சொல்ல வேண்டும். வேளாண் மண்டலமாக உள்ள சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி தாலுகா பகுதிகளை பாலைவனமாக்கும் இந்த திட்டத்தை நடவடிக்கை திரும்ப பெற வேண்டும்" என்றார்.
அதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர், “வீராணம் ஏரி பகுதியில் மத்திய அரசு அனுமதியுடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதை அறிந்ததும் ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது. இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வருகிறது. ஆகவே மாநில அரசு அனுமதி இல்லாமல் என்.எல்.சி நிர்வாகம் எந்த பணியும் செய்யாது” என்றார். ரவீந்திரன் பேசுகையில், “என்.எல்.சிக்காக மாவட்ட ஆட்சியர் நிலம் கையகப்படுத்த விவசாயிகளை நிர்ப்பந்தப்படுத்துவது வேதனையாக இருக்கிறது" என்றார். அதற்கு மாவட்ட ஆட்சியர், "என்.எல்.சி பிரச்சனை பற்றி இங்கு பேச வேண்டாம்” என்றார்.
மீண்டும் ரவீந்திரன், “வீராணம் ஏரி பகுதியில் மத்திய சுரங்கத் துறை சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து, தாதுப் பொருட்கள் குறித்த ஆய்வு மேற்கொள்கிறது. அந்த ஆய்வு குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கு பூமிக்கடியில் 220 மீட்டர் தூரத்தில் 13 இடங்களில் வெற்றிடம் உள்ளது. அந்த வெற்றிடம் தற்போது அதிகரித்துள்ளது. இது என்.எல்.சி நிர்வாகம் தண்ணீரை உறிஞ்சுவதால் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது” என்றார். அதற்கு மாவட்ட ஆட்சியர், “நீங்கள் கூறுவதை பற்றி உண்மையான நிலவரம் தெரியவில்லை. இருப்பினும் வீராணம் ஏரி பகுதியை சுற்றிலும் முதல் கட்ட ஆய்வு பணியே முடியவில்லை. அப்படியே பூமிக்கடியில் தாது பொருட்கள் இருந்தாலும் அதை மாநில அரசு அனுமதி இன்றி எடுக்க முடியாது. எனவே பொதுமக்கள் பீதி அடையத் தேவை இல்லை” என்றார்.
முன்னதாக விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த விவசாயிகள் 'என்.எல்.சி நிர்வாகம் ஏற்கனவே விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்திய நிலத்திற்கு உரிய இழப்பீடு, நிரந்தர வேலை வழங்கவில்லை. ஆகவே என்.எல்.சி நிர்வாகம் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும்' என்று வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து அனைவரும் கருப்புப் பட்டை அணிந்து கூட்டத்தில் கலந்து கொண்டனர்.