புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வீரமணி (வயது 40). தனது தோட்டத்தில் இருந்த ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் வற்றிப் போனதால் குடிதண்ணீருக்கு கூட திண்டாடிய நிலையில் புதிய முயற்சியாக தன் வீட்டின் ஓட்டில் விழும் மழைத் தண்ணீரை ஒரு துளி கூட வீணாகாமல் குழாய்கள் மூலம் எடுத்துச் சென்று தூசிகள் இல்லாமல் சல்லடை வைத்து வடிகட்டி அருகில் பழைய கிணற்றை சீரமைத்து, அதில் சேமித்து பயன்படுத்தி வருகிறார். கடந்த ஆண்டு வீசிய கடுமையான கஜா புயலில் மின்சாரம் பாதிக்கப்பட்டு அந்தப் பகுதியில் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது வீரமணி வீட்டில் சேமிக்கப்பட்ட மழைத் தண்ணீரே குடிக்கவும், வீடுகளில் பயன்படுத்தவும் அப்பகுதி பொதுமக்களுக்கு கை கொடுத்தது. தன் வீட்டுத் தேவைக்கு மட்டுமின்றி தனது தோட்டங்களில் உள்ள மரக்கன்றுகளுக்கும் தண்ணீர் பாய்ச்சி வந்தார்.
இந்த செய்தியை நக்கீரன் இணையத்தில் வெளியிட்டோம். நக்கீரன் இணைய செய்திக்கு பிறகு பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது. இந்த செய்தியின் தாக்கத்தால் மாவட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து பாராட்டியதுடன் ஆவணப்படங்களும் எடுத்துச் சென்று விவசாயிகள் ஆய்வுக் கூட்டத்தில் திரையிட ஏற்பாடுகள் செய்திருந்தனர். ஆனால் ஆய்வுக்கூட்டத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் கொடுக்க முடியவில்லை. இந்த நிலையில் தான் தண்ணீர் சேமிப்பு குறித்து கடந்த ஆய்வுக்கு வந்த மத்திய ஆய்வுக்குழுவினர் வீரமணி வீட்டிற்கு சென்று பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டு அவரது வீட்டிற்கு சென்று பார்வையிட்டு பாராட்டியடன் இதே முறையை அனைவரும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள்.
புயலில் அவர் வீட்டைச் சுற்றி நின்ற மரங்களும் சாய்ந்து விட்டது. அதனால் புதிய மரக்கன்றுகளை வைத்து மழைநீர் சேகரிப்பு தொட்டியில் இருந்து தினசரி தண்ணீர் ஊற்றிய வளர்த்தார். ஆனால் பல மாதங்களாக மழை இல்லாததால் வறட்சி மற்றும் கடும் வெயிலால் ஒவ்வொரு நாளும் தண்ணீர் ஊற்ற ஊற்ற மரக்கன்றுகள் காய்ந்து விட்டது. இதனால் மாற்று வழி தேடியவர். ஒவ்வொரு மரக்கன்றுக்கு அருகிலும் குழாய்களை ஆழமாக புதைத்து, அதில் தண்ணீர் ஊற்றும் போது கன்றுகளின் வேருக்கே தண்ணீர் சென்று மரக்கன்றுகள் துளிர் விடத் தொடங்கிவிட்டது. இந்த முறையால் தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்தி மரக்கன்றுகளை வளர்க்கிறார். இது குறித்து விவசாயி வீரமணி கூறும் போது, 350 அடி ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் இல்லாமல் போனதால் விவசாயம் முற்றிலும் அழிந்தது. அதன் பிறகு தண்ணீர் தேவைக்காக ஓட்டு வீட்டில் விழும் மழைத்துளிகளை சேகரித்து குழாய்கள் மூலம் கொண்டு வந்து அருகில் கிடந்த பழைய கல் கட்டிய கிணற்றை கீழே தளம் அமைத்து மேலே மூடிகள் அமைத்து மழைத் தண்ணீரை 3 சல்லடைகள் வைத்து வடிகட்டி தொட்டிக்குள் சேமித்து வைத்து பயன்படுத்தி வந்தேன். புயலில் மரங்கள் முற்றிலும் சாய்ந்து விட்டது.
அந்த மரங்களை நிமிர்த்தி வளர்க்க நினைத்தேன். மழை இல்லை அதனால் அத்தனை மரங்களும் கருகிவிட்டது. அதன் காரணமாக தோட்டங்களில் புதிய மரக்கன்றுகளை வைத்து மழைநீர் சேகரிப்பு தொட்டியில் இருந்து தண்ணீர் ஊற்றினால் உடனே காய்ந்து விடுகிறது. அதனால் மரக்கன்றுகளுக்கு அருகில் 2 அடி ஆழத்திற்கு குழாய் புதைத்து அதில் கொஞ்சம் மணல் போட்டு மேலே தண்ணீர் ஊற்றும் போது அதில் 5 லிட்டர் தண்ணீர் ஊற்றினால் 5 நாட்கள் வரை குழாயில் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக கீழே சென்று கன்றுகளின் வேர் பகுதியில் அடிமட்டம் வரை தண்ணீர் செல்வதால் அந்த வேர்கள் காய்வதில்லை. அதனால் ஒரு மாதத்தில் 2 முறை தண்ணீர் ஊற்றினால் போதுமானதாக உள்ளது. அதன் பிறகு கன்றுகள் வளரத் தொடங்கியுள்ளது. மரக்கன்றுகளை வளர்க்க இதே போல தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்தி வளர்க்களாம் என்றார்.
இதே ஊரில் தான் மரக்கன்றுகளை வளர்க்க பானைகளை பயன்படுத்தி கசிவு நீர் பாசனத்தையும் பயன்படுத்த அலஞ்சிரங்காடு குருகுலம் பள்ளி மாணவர்கள் 200 மண்பானைகளை வழங்கி கசிவு நீர் பாசனம் குறித்தும் செய்தும் காட்டினார்கள். தற்போது இளைஞர்கள் கசிவு நீர் பாசனத்தை பயன்படுத்தி வருகிறார்கள். அதில் ஒரு மாற்றாக வீரமணி குழாய் நீர் பாசனம் மூலம் மரக்கன்றுகளை வளர்த்து வருகிறார். அத்தனையும் தண்ணீர் சிக்கனம் தான்.