தேன்கனிக்கோட்டை அருகே, வயலில் இரவுக்காவலுக்காகச் சென்றிருந்த விவசாயி, யானை மிதித்து பலியானார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கெம்பகரையைச் சேர்ந்தவர் கண்ணன் (46). விவசாயி. இவர் கடந்த வெள்ளிக்கிழமை (ஜன. 14) இரவு, கெம்பகரையில் உள்ள தனது விவசாய நிலத்துக்கு காவலுக்குச் சென்றார்.
மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவரைத் தேடிச்சென்றனர். அப்போது கண்ணன், வயலில் உடல் நசுங்கி, குடல் பகுதிகள் வெளித்தள்ளிய நிலையில் சடலமாகக் கிடந்தது தெரிய வந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர், இதுகுறித்து தேன்கனிக்கோட்டை வனத்துறை மற்றும் அஞ்செட்டி காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.
வனச்சரக அலுவலர் முருகேசன், வனவர் பிரகாஷ் மற்றும் அஞ்செட்டி காவல்நிலைய காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். அவரை யானை மிதித்து கொன்றிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கண்ணனின் சடலம் உடற்கூராய்வுக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.